“காவியத்தலைவன்” படத்துக்காக ஹாலிவுட் பட வாய்ப்பை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

“காவியத்தலைவன்’ படத்துக்காக ஹாலிவுட்டில் வந்த பட வாய்ப்பை இழந்தேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகளைப் பெற்ற பிறகு தமிழ் சினிமாவில் அரிதான படங்களில் மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ஒய்நாட் புரொடக்ஷன் சார்பில் வசந்தபாலன் இயக்கி வரும் “காவியத்தலைவன்’ படத்துக்கு தற்போது இசையமைத்து வருகிறார். நாடக சபாக்கள் தமிழகத்தில் கோலோச்சிய கால கட்டத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது: ஆஸ்கர் விருதுக்கு பிறகு அரிதான படங்களில் மட்டுமே இசையமைத்து வருகிறேன். வசந்தபாலன் சொன்ன இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதற்காக நான் பணியாற்ற அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. இந்தப் படத்துக்கு இசையமைப்பதற்காக ஹாலிவுட் படத்தில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை இழந்தேன்.

“காவியத் தலைவன்’ படத்தில் 20 பாடல்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கிளைப் பாடல்களாக அமைந்துள்ளன என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சித்தார்த், நடிகை வேதிகா, படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் உள்பட படக்குழுவினர் உடனிருந்தனர்.