கோயிலுக்கு சென்ற இடத்தில் காட்டுக்குள் மாயமான கலை இயக்குனர்

art_director_001தமிழ் சினிமாபட கலை இயக்குனர் விதோ மிர்தாத் மாயமானதால் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் சினிமாபட உலகில் கலை இயக்குனராக இருந்து வருபவர் வினோ மிர்தாத். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக மதுபானக்கடை உள்பட பல்வேறு சினிமா படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

இவர் கோவையை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரி மலை குறித்து பல்வேறு குறும்படங்கள் எடுத்துள்ளார்.

சிவராத்திரி விழாவையொட்டி வினோ மிர்தாத் வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மலையில் இருந்து இறங்கும்போது 6-வது மலை பகுதியில் அவர் பாதை மாறி வனப்பகுதிக்குள் தனியாக சென்று விட்டதாக தெரிகிறது. காலை 9.30 மணி அளவில் வழி மாறி வந்துவிட்டதாக இயக்குனர் கமலக்கண்ணனுக்கு அவர் கைப்பேசியில் தகவல் கொடுத்துள்ளார்.

இதன் பேரில் கமலக்கண்ணன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் உதவியுடன் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிங்கிரிமலை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைப்புலி, செந்நாய்கள் மற்றும் பல வனவிலங்குள் உள்ளன. அதனால் வனப்பகுதிக்குள் தனியாக சென்ற அவர் வனவிலங்குகளிடம் சிக்கினாரா? அவரது கதி என்ன என்று தெரியவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வினோ மிர்தாத் வெள்ளிங்கிரி மலைக்கு தனியாக சென்றுள்ளார். அவர் வெள்ளிங்கிரி கோவிலுக்கு சென்றிருந்தால் காணாமல் போவதற்கோ வழி மாறி செல்வதற்கோ வாய்ப்பு இல்லை. அவர் வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம்.

இருப்பினும் தற்போது 3 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்றும் மேலும் மாயமான வினோ மிர்தாத்தின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.