பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வெற்றிகரமாக 100 படங்களில் நடித்த நடிகர்களின் வரிசையில் தற்போது தன்னை இணைத்துக்கொண்டார்.
அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரதாப் போத்தன். தொடர்ந்து வறுமையின் நிறம் சிவப்பு, மூடு பனி, பன்னீர் புஷ்பங்கள், உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். அத்துடன், தமிழில வெற்றி விழா, லக்கி மேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
தற்போது தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் சில ரோல்களில் நடித்து வருகிறார். அதேசமயம் கேரளாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். Once Upon A Time There Was A Kallan என்ற மலையாளப்படம்தான் பிரதாப் போத்தனின் 100 வது படம். பிரதாப் போத்தன் இந்த படத்தில் ஒரு வயதான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலட்சுமி நடிக்கிறார். பாசில் முகம்மது இந்தப் படத்தை இயக்குகிறார். ஜான் புத்தூர் என்பவர் தயாரிக்கிறார்.
பிரதாப் -ஸ்ரீலட்சுமி தம்பதிகளின் கடைசி கால வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் ஒரு திருடனால் அவர்களது வாழ்க்கை நிலை தலைகீழாக மாறிவிடுகிறது. இதுவே இந்த படத்தின் கதைக்கரு.
100 வது படம் குறித்து பிரதாப் போத்தன் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, ரசிகர்களின் மனதில் இடம் பெற்று ஒரு நடிகர் 100 படங்களில் நடிப்பது என்பது தற்போதைய போட்டி உலகில் சாதாரண விஷயமில்லை. என்னுடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கும் எனது ரசிகர்களே காரணம். என்னுடைய 100 வது படத்தினை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.