இருபது வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் இளையராஜாவின் இசை மழை!

இருபது வருடங்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி மதுரையில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் மலேசியாவில் இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா கிங் ஆப் கிங் என்ற பெயரில் இளையராஜா பாடல்களை கச்சேரியாக நடத்தினார். இதில் இளையராஜா பங்கேற்பதாக இருந்து, உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும், ரசிகர்களுக்காக வீடியோ கான்பரசிங் மூலம் இந்த நிகழ்ச்சியில் பேசினார். இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இதுபோல் மதுரையிலும் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை நேற்று கார்த்திக் ராஜா பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது வந்த முதல் போன் கால் பண்ணைபுரத்திலிருந்துதான். அதற்கப்புறம் வரிசையாக என் செல்போனில் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களின் பாசத்தை அன்றுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். அவர்களுக்காக… அப்பாவை கொண்டு போய் அவர்கள் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக…. மட்டும்தான் இந்த கச்சேரி. மதுரையிலிருந்து பண்ணைபுரம் இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், தனி பேருந்துகளில் அந்த கிராமத்தையே மதுரைக்கு கொண்டு வரப்போகிறோம் என்றார் கார்த்திக் ராஜா.

இளையராஜா பங்குபெறும் இந்த இசை நிகழ்ச்சி ‘ராஜாவின் சங்கீத திருநாள்´ என்ற பெயரில் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி, ஹரிகரண், எஸ்.என்.சுரேந்தர், ஷாலினி, வினயா, உமா ரமணன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்விக்க போகின்றனர். இருபது வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த மண்ணான பண்ணைப்புரத்தில் ஒரு கச்சேரியை நடத்தினார் இளையராஜா. இதைத்தொடர்ந்து தற்போதுதான் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் நேரடி இசை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார்.