ராஜா ராணி கதையில் நடிக்க முடியாத ஆதங்கம் “கோச்சடையான்’ படத்தின் மூலம் தீர்ந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். “கோச்சடையான்’ பட வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் “ஏ மீடியா ஓன் குளோபல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் “கோச்சடையான்’. ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் இப்படத்தை அவரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் முதன் முறையாக இயக்கியுள்ளார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் “மோஷன் கேப்சர் 3டி’ தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஆடியோ மற்றும் தமிழ், தெலுங்கு பதிப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஆடியோ மற்றும் டிரெய்லர்களை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வெளியிட்டார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
எல்லோருக்கும் நன்றி சொல்லும் நேரம் இது. “கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறைய பேசுவேன். சிறு வயதில் இருந்தே ராஜா ராணி கதைகள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. ஒரு சிறுகதை படிப்பதாக இருந்தால் கூட அதில் ராஜா, ராணி கதை மாதிரி இருந்தால்தான் படிப்பேன். ஆனால் இதுவரை நடித்த 150 படங்களில் ஒரு படத்தில் கூட நான் நினைத்த ராஜா, ராணி கதை அமையவில்லை. அப்படியொரு படம் நடிக்கவில்லை என்ற ஆதங்கமும் எனக்கு உண்டு.
வேண்டிய அளவுக்கு புகழும், பணமும் ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள். என் எண்ணப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதுதான் “ராணா’. 20 வருடங்களுக்கு மேலாக அந்த கதை எனக்குள் இருந்தது. ஒரு வழியாக படப்பிடிப்புக்கு வந்த முதல் நாளில்தான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் பின் நடந்தவையெல்லாம் உங்களுக்குத் தெரியும். மருத்துவமனையில் இருந்து திரும்பிய போதும் அந்த கதையில் அத்தனை ஆர்வம். ஆனால் என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இப்போது அந்தப் படத்தை செய்ய முடியாது என்கிற நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன ஒரு கதை மிகவும் கவர்ந்தது. ஆனால் நடிக்க முடியாத நிலையில் இருந்த போதுதான், “சுல்தான் தி வாரியர்’ படத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பங்களை இதில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பற்றி நிறைய சொன்னார். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும், அன்புக்கு கை மாறாக எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இதை செய்து முடிக்க ஐந்தாறு வருடங்கள் ஆகும். ரூ.200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் தேவைப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டில் கூட இதை செய்து முடிக்கலாம் என சொன்னார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் தந்த ஊக்கம், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் முரளி போன்றவர்களின் ஒத்துழைப்பு, சௌந்தர்யாவின் திறமை எல்லாமும் இதை செய்து முடித்திருக்கிறது. இதை இத்தனை விரைவில் செய்து முடித்தது பெரிய வேலை. படம் பார்த்து விட்டேன். 3டி தொழில்நுட்ப வேலைகள் மட்டும் இப்போது நடந்துக் கொண்டிருக்கின்றன.
“கோச்சடையான்’ வெற்றி விழாவில் ரசிகர்கள் எல்லோரையும் சந்திப்பேன். பெரிய விழாவாக அதை நடத்த இருக்கிறேன். ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருக்கும் அவர்களது கணவர்களும், குடும்பங்களும் சுதந்திரம் வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்கள், குடும்பத்துக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.
நான்கு தளங்களை சந்தித்தவர் ரஜினி – வைரமுத்து: “கோச்சடையான்’ என்ற தலைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. “கோச்சடையான்’ என்றால் என்ன பொருள் என்று பல பேர் கேட்கின்றனர். “கோச்சடையான்’ என்ற பெயருக்கு சடையில் கொன்றைப் பூ சூடிய சிவபெருமான் என்று பொருள். அதை பாண்டிய மன்னர்களின் பரம்பரை பெயராகவும் குறிக்கலாம்.
இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்திருக்கிறது. கருப்பு, வெள்ளையில் தொடங்கி வண்ணம், முப்பரிமாணம், சலனப்பதிவு தொழில்நுட்பம் என்ற 4 தளங்களை சந்தித்து இருக்கிறார்.
40 ஆண்டுகளாக தன் சிம்மாசனத்தில் அசைக்க முடியாதபடி அமர்ந்திருக்கிறார். அவர் நல்ல நடிகர், உழைப்பாளி என்பது மட்டுமல்ல. நல்ல மனிதர். நல்லெண்ணங்களால் வாழ்த்தப்படுகிறார்.
இந்தப் படத்தில் நானும், ரஹ்மானும் சுதந்திரமாக வேலை செய்திருக்கிறோம். அவர் இட்டதே மெட்டு. நான் கட்டியதே பாட்டு. அதனால் நகல் எடுக்காத நல்ல பாடல்கள் அமைந்திருக்கின்றன. ரஜினியின் முதல் ரசிகனுக்கு வயது 65. இன்றைய ரசிகனுக்கு வயது 25. இப்படி இரண்டு தலைமுறை ரசிகர்களையும் பெற்றிருப்பது ரஜினியின் பலம். இன்னும் 20 ஆண்டுகள் திரையுலகில் ஆரோக்கியமாக பணியாற்ற அவரை வாழ்த்துகிறேன் என்றார் வைரமுத்து.
விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், தயாரிப்பாளர் முரளி மனோகர், நடிகர்கள் ஷாரூக்கான், ஜாக்கி ஷெராப், சரத்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.