‘பனிவிழும் நிலவு’ மிதமான குளிர்ச்சி.

paniநாயகன் ஹிருதய், நாயகி ஈடன் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் கல்லூரியில் கேலி, கிண்டல், சேட்டை, அரட்டை என சந்தோஷமாக இருக்கிறார்கள். அதிலும் ஹிருதய் மிகவும் விளையாட்டு குணம் உடையவன். இவன் செய்யும் விளையாட்டு தனத்தால், இவர்கள் நண்பர்களின் ஒருவன் கல்லூரிக்கு வரமுடியாமல் போகிறது.

அதன்பிறகு இவர்களின் நண்பர்கள் குழுவில் உள்ள ஒருவன் நாயகி ஈடனை காதலிக்கிறார். இதற்கு விளையாட்டு தனமாக ஹிருதய் உதவி செய்ய, ஈடனிடம் அடி வாங்குகிறார்.

ஒருநாள் மைதானத்தில் விளையாட்டின் போது ஹிருதய்க்கு ஈடன் முத்தம் கொடுக்க, அதிலிருந்து இருவருக்கும் காதல் மலர்கிறது. பிறகு இருவரும் காதலர்களாக சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்த விஷயம் தற்சமயம் நண்பர்களுக்கு தெரிய வேண்டாம் என்று ஈடன் கூறுகிறார். எப்போதும் இவர்கள் நண்பர்களுடனேயே இருக்கும் நிலையில் ஒருநாள் ஹிருதய்யை ஈடன் தனியாக கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் செல்கிறார். ஹிருதய்யும் உற்சாகத்தோடு பெற்றோர், நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு ஈடனுடன் செல்கிறார்.

அங்கு ஈடனுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்த ஹிருதய்க்கு பெரிய அதிர்ச்சி கிடைக்கிறது. அங்கு நண்பர்கள் வந்து விடுகிறார்கள். அவர்கள் முன்னிலையில் ஈடன், நான் உன்னை காதலிக்கவில்லை. விளையாட்டுக்காகத்தான் இப்படி செய்தேன் என்று சொல்லுகிறார். இதனால் மனவேதனை அடையும் ஹிருதய் நண்பர்களையும், காதலியையும் விட்டு பிரிகிறார்.

இறுதியில் நண்பர்களிடமும், காதலியிடமும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஹிருதய் காதல், நடனம், சோகம் என அனைத்து காட்சிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார். நாயகி ஈடனுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், ஒரு சில காட்சிகளில் திறம்பட செய்திருக்கிறார். கல்லூரி நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் நடிப்பு திறனை கொண்டுவர முயற்சி செய்த கௌசிக்கை பாராட்டலாம்.

ஜம்போ கதாபாத்திரத்தில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி, அவருக்கே உள்ள பாணியில் இரட்டை வசனங்களை பேசி அனைவரையும் சிரிக்க வைக்கிறார். பாண்டியராஜ், கோவை சரளா ஆகியோர் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கணேசன் இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். வாசன் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு மெருகூட்ட முயற்சி செய்திருக்கிறார்.

சின்னத்திரையில் நடிப்புத்திறனால் முத்திரைப்பதித்த கௌசிக், வெள்ளித்திரையில் இயக்குனராக திறமையாக செய்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அனைவரிடமும் சிறப்பாக வேலையை வாங்கியிருக்கிறார். பிற்பாதியில் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். காதல் கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அதில் காமெடியை கலந்து சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘பனிவிழும் நிலவு’ மிதமான குளிர்ச்சி.