இனம் – விமர்சனம்!

ஈழத்தில் நடந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லாத சூழ்நிலையில் போரின் போது கைக்கைட்டி வேடிக்கைப் பார்த்த உலக சமுதாயத்தின் முகத்தில் அறைவது போல இனம் என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது. அங்கே நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான அடிப்படை விஷயங்களோ, காரணங்களோ படத்தில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அங்கே நடந்ததும்… நடந்துகொண்டிருப்பதும் இனப்படுகொலை என்ற உண்மையை பதிவு செய்த இனம்  படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான சந்தோஷ் சிவனுக்கு நம் நன்றியை பதிவு செய்வதே தர்மமாகும்.

படம் எப்படி இருக்கிறது என்று நான்கு வரிகளில் விமர்சனம் எழுத இது வழக்கமான சினிமா இல்லை. ஈழத்தமிழரின் அவலங்கள் கடலாய் இருக்க, அதில் ஒரு துளியை பதிவு செய்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அந்த ஒரு துளியின் ஒரு துளிதான் இந்த வார்த்தைகள்…

கடல்தாண்டி அகதியாய் வந்த ஒரு பெண் தன் கடந்தகாலக் கொடுமைகளையும் தனக்கு நேர்ந்த அவலங்களையும் பகிர்ந்துகொள்வது போலத்தான் படத்தின் கதை அமைகிறது. நான்கு புறமும் குண்டுமழை… எப்போது சாகப்போகிறோம் என்று தெரியாத நிலை… என்றாவது ஒரு நாள் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பு… என  கனவுகளை சுமந்து கொண்டு வாழும் ரஜினி என்ற பெண். அவளுடன் குடும்பத்தைத் தொலைத்தவர்கள் பலரும் ஒரு குடும்பமாய் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிஞ்சுப் பூக்களை அரவணைத்து பாதுகாப்பவர் சுனாமி அக்கா எனும் சரிதா. அந்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஸ்டான்லியாக கருணாஸ்.

கடற்கரையில் கையில் சின்னக் கத்தியுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடக்க, அவனை சுனாமி அக்காவின் காப்பகத்திற்கு கொண்டுவருகிறார்கள் பிள்ளைகள். கையில் கத்தி வைத்திருந்தாலும் அவன் பேச்சு வெகுளியாய் இருக்கிறது. ஆட்டிஸத்தோடு இருக்கும் விஷேசக் குழந்தை எனத் தெரியவருகிறது.  அவன் பெயர் நந்தன். அங்கே நடக்கிற அத்தனை விஷயங்களையும் நந்தனின் பார்வையிலேயே பதிவு செய்வதுபோல அமைகிறது காட்சிகள். ரஜினிக்கு அவன் மீது தனி அக்கரை ஏற்படுகிறது. மற்ற பிள்ளைகள் அவனை கிண்டலும் கேலியும் செய்யும்போது கூட ரஜினி அவர்களை கண்டித்து அவன் மேல் கரிசனத்துடன்நடந்துகொள்கிறாள்.

அதே முகாமில் இருக்கும் ஒரு வாலிபனோடு காதலில் விழுகிறாள் ரஜினி. அந்த நிலை நீடிப்பதற்குள்ளாகவே தான் காதலித்தவன் விடுதலை போராட்டத்தில் ஈடுபட காப்பகத்தில் இருந்து வெளியேறி விடுகிறான். பெண் மீது வைத்திருக்கும் காதலைவிட, மண் மீது வைத்த காதல் தான் மேன்மையானது என்று நினைத்ததே காரணமாக இருந்திருக்கலாம்.

ஆகாயத்தில் விமானங்கள் பறக்கும்போதும் குண்டு சத்தங்கள் கேட்கும்போதும் வெட்டிய குழிகளில் பதுங்கிக் கொள்ளும் தன் பிள்ளைகளை பார்த்து இதயம் கொதிக்கும் சுனாமி அக்கா, கோபத்தின் உச்சத்தில் ‘என் பிள்ளைகளுக்கு நான் கல்யாணம் செய்துவைக்கப் போகிறேன்’ என்ற முடிவெடுக்கிறார்! பூமியில் அமைதி பூக்கும்… காதலன் என்றாவது ஒரு நாள் திரும்புவான்… என்ற ஏக்கங்கள் கண்களில் மிதக்க, தன்னை காப்பாற்றிக்கொள்ள நந்தனை தன் கணவனாக தேர்ந்தெடுக்கிறாள் ரஜினி.

தாய்மை உள்ளத்தோடு நந்தனை நேசித்தாலும் இதயமெல்லாம் காதலனே நிறைந்திருக்கிறான். காட்சிகள் நகர… இலங்கை இராணுவத்தினர் அவளை பரிசோதனை என்ற பெயரில் உடலை விரல்களால் தடவிப்பார்க்க, அவளை விட்டுவிடுங்கள் என கருணாஸ் கையில் கிடைத்த ஒரு கம்பைக் கொண்டு மிரட்ட, வேறு வழியில்லாமல் தமிழர்கள் துப்பாக்கியால் பேசுகிறார்கள்… தப்பி செல்ல நினைத்த ரஜினி ஒரு சிங்கள வெறிநாயிடம் சிக்கிக்கொள்ள, அந்த நாய் அந்தப் பெண்ணை சின்னாபின்னமாக்குகிறது. அந்த கற்பழிப்புக் காட்சியை தன் செல்போனில் பதிவு செய்வது இன்னொரு சிங்கள நாய்.

ஒரு மருத்துவ முகாமில் தான் லீடர் என அழைக்கும் தம்பியை பார்த்துவிட்டு தப்பிசெல்ல ரஜினியோடு படகின் அருகில் வரும் நந்தனுக்கு தன் தம்பியின் நினைவு வர, ரஜினி எவ்வளவோ அழைத்து திரும்பிப்பார்க்காத நந்தன் மறைந்த இடத்தில் ஒரு குண்டுவிழுவதப் பார்க்கிறாள் ரஜினி…

இனம் படத்தைப் பொறுத்தவரை, அதை ஒரு கதையாக வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. அது ஒரு வலி! அடையாளத்தை இழந்து, குடும்பத்தை இழந்து, உடமைகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்து இதயத்தில் ரணங்களையும், வலிகளையும் மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளின் சொல்ல முடியாத சோகத்தை பதிவு செய்த இனம் படத்தை வெளியிட முன் வந்த லிங்குசாமிக்கும் ஒரு பெரிய நன்றியை சொல்ல வேண்டும்.

மனிதர்களையும் தாண்டி குண்டு வெடிக்கும் நேரத்தில் அலரித் துடிக்கும் பறவைகளையும் விலங்குகளையும் தன் கேமராக் கண்கள் கொண்டு பதிவு செய்த சந்தோஷ் சிவன் அந்தக் காட்சிகளில் மனதை உருக்குகிறார்.

இங்கிருந்து போகவேண்டாம் என்று வெள்ளைக்காரர்களை தமிழ் மக்கள் கெஞ்சும் காட்சியில் மீன்களுக்கு நடுவில் கேமராவை நகர்த்துவது பிரம்மிப்பு. அந்தக் காட்சியின் முடிவில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பதிவு செய்வது சந்தோஷ் சிவனின் துணிச்சல்.

‘எல்லா நாட்டிலும் தான் வெடி செய்கிறார்கள், ஆனால் எல்லாம் இங்கே தானே வெடிக்கிறது’ என்பது வசனமல்ல நிஜம் என்ற உண்மையை நிரூபிக்கிறது இனம். ‘பாட்டன் முப்பாட்டன் காலத்துல தொடங்கிய சண்டை இப்போ குழந்தைங்க சத்தமே கேக்குறதில்லை…’ என சரிதா சடலங்களுக்கு நடுவில் புலம்புகிறாரே… அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரல்.

தமிழர்கள் என தெரிந்த பிறகும் பழத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார் ஒரு புத்த பிட்சு, கற்பழிப்புக் காட்சிட்யை செல்போனில் பதிவு செய்யும் சிங்களவனை  இன்னொரு சிங்களவன் திட்டுகிறான்… இந்த இரண்டு காட்சியிலும் சிங்களவன் உத்தமன் என்று விளக்கப்பட்டுவிட்டதா என்ன? ஆயிரம் பேரில் ஒரு நல்லவன் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

சிங்கள ராணுவம் இரக்கமில்லா மிருகங்களாக மாறும்போது, கையில் கிடைத்த கம்பைக் கொண்டு, என் குடும்பத்தை காப்பாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என புலியாய் உருமுகிறாரே ஸ்டான்லியாக நடித்திருக்கும் கருணாஸ்… இதைத் தீவிரவாதம் என்று சொல்கிறவன் முட்டாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்.

தமிழுணார்வு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டியதை சந்தோஷ் சிவன்  செய்திருக்கிறார். ஈழ விடுதலைக்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் இந்தப் படைப்பில் எங்கே சொல்லப்படுகிறது என்ற விமர்சனங்கள் கண்டிப்பாக எழும்… இப்படி நடந்தது என்ற உலகத்துக்கு ஒரு பதிவை செய்ய ஒருவர் வேண்டுமல்லவா… அந்த விதத்தில் இனம் படத்தை ஆதரிப்பது நியாயம் என்றே தோன்றுகிறது!

ஈழ விடுதலைப் போராட்டத்தோடு பயணித்தவர் அல்ல என்பதை வைத்து அந்தப் படைப்பை கொச்சைப்படுத்துவது நியாயமில்லை. இத்தனை கொடுமைகள் நடந்தும் நீயும் நானும் என்ன செய்தோம், இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் சந்தோஷ் சிவனுக்கு வந்திருப்பதில் என்ன தவறு!

 

படத்தின் முடிவில் போரில் இறந்தவர்களின் பட்டியலை காட்டி(இறந்தவர்களின் எண்ணிக்கை தவறானது என்றாலும்) அவர்களுக்கு இந்த படம் சமர்ப்பனம் என்பதோடு… என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தை நான் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் ஈழத்தின் திசை நோக்கிப்பார்க்கும் இறுதிக்காட்சி நமக்குள்ளும் அதே நம்பிக்கையை விதைக்கிறது!

இனம் – வலியின் ஒரு துளி…!

-நக்கீரன் விமர்சனம்