தமிழர்களுக்கு எதிரான படமல்ல “இனம்”

Inamதமிழர்களுக்கு எதிரான படமாக “இனம்’ உருவாகவில்லை என தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தெரிவித்தார். தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின் ஒரு படத்துக்கு எதிராக வரும் புகார்கள் படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.

லிங்குசாமியின் தயாரிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம் “இனம்’. ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தவறாக சித்திரிக்கும் விதத்தில் இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், பாலாஜி சக்திவேல், சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் கூறியது:

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “இனம்’ திரைப்படத்தை இயக்குநர் சங்கத்தை பல உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். “இனம்’ படத்தில் தமிழ்ச் சமூகத்துக்கு எதிராகவோ, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவோ எந்தவொரு காட்சியும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒருமித்த கருத்தாக உள்ளது.

தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக எதிர்மறை கருத்துகள் எழுந்த நேரங்களில் எல்லாம் திரைத்துறை முன் நின்றுள்ளது. அவ்வாறு இருக்கையில் தமிழ்ச் சமூகத்துக்கு எதிரான எந்தவொரு கருத்துக்கும் நாங்கள் துணை நிற்க மாட்டோம். “இனம்’ திரைப்படம் ஈழப் போரின்போது நடந்த சம்பவங்களின் முழுப் பதிவாக உருவாகியுள்ளது. இப்படைப்பு தமிழர்களைக் கடந்து உலக மக்களைச் சென்றடைய வேண்டும்.

தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னர் ஒரு படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. இவ்வாறு எழும் புகார்கள் படைப்புலகத்துக்கு எதிரானது. படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றார் விக்ரமன்.

முன்னதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் “இனம்’ திரைப்படம் தமிழர்களின் இனப் போராட்டத்தை கொச்சைப்படும் விதத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தடை விதிக்க கோரி புகார் மனு அளித்தனர்.