சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் இந்தி பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அமிதாப்பச்சன் வெளியிட ஐஸ்வர்யா பச்சன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: இந்த படம் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு தொழல்நுட்பம் பற்றி தெரியாது. இதுபோன்ற படங்களில் நான் திணிக்கப்பட்டுள்ளேன். இது கடவுளின் சித்தம். எனக்கு சவாலாகவும் இருந்தது, நல்ல அனுபவமாகவும் இருந்தது. படத்தை இயக்கிய என் மகளை எல்லோரும் பாராட்டும்போது மகிழ்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சவுந்தர்யா சிறு வயதிலேயே அமர் சித்ரா கதைகளை விரும்பி படிப்பாள். அதை படமெடுக்க விரும்புவாள். அதனை இப்போது நிறைவேற்றிக் கொண்டாள். கோச்சடையானை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது: தமிழ் நாட்டில் ரஜினியின் செல்வாக்கு ஆச்சர்யப்பட வைக்கும். அவரது படத்தை முதல் நாளில் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. பல நாட்கள் கடந்த பிறகும் தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்து கொண்டே இருக்கும். நானும் ரஜினியும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறோம். சொந்த வாழ்க்கை பற்றி இருவரும் பரிமாறிக்கொள்வோம். எந்திரன் படத்திற்கு பிறகு சினிமா எனக்கு போரடித்துவிட்டது. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார் நான்தான் நடிப்பதை நிறுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டேன். ரஜினி கருணையும், மனிதாபிமானமும் மிக்க அற்புத மனிதர். இந்திய சினிமா, இனி கோச்சடையானுக்கு முன், கோச்சடையானுக்கு பின் என்று தான் பேசப்படும்.
இவ்வாறு அமிதாப் பச்சன் பேசினார்.
-தினமலர்