நான் சினிமாவில் காமெடி செய்கிறேன், சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள்

vadivelநான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் என்றார் வடிவேலு. வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் தெனாலிராமன். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த இரண்டரை வருடம் நடிக்காமல் ஓய்வு எடுத்தேன். அது எனக்கு தேவைப்பட்டது. எனக்கு வேதனை கிடையாது. மகிழ்ச்சிதான். யாராவது என்னை வைத்து படம் தயாரிக்க நினைத்தால் உடனே அவர்களை பயமுறுத்தி வடிவேலுவையா போடுகிறீர்கள், அவ்வளவுதான் என்று சொல்லி முடக்கினார்கள்.

தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதை ஏற்றிருந்தால் தமிழ் படத்திலிருந்து வடிவேலு மூட்டை கட்டிக்கொண்டு போய்விட்டான் என்று கூறி இருப்பார்கள். ஆனால் எதற்கும்  தயங்காமல் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார் அகோரம்.  எனக்கு ஜோடியாக நடிக்க வந்த 6 ஹீரோயின்களை பயமுறுத்தியே விரட்டி விட்டார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் மீனாட்சி தீட்சித் நடித்தார்.  சினிமாவில் நான் காமெடி செய்துகொண்டிருக்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். எனக்கு அரசியல் வேண்டாம்.

சினிமாவில்தான் என் முழுகவனம் இருக்கும். தெனாலிராமன் கதை கற்பனை கலந்தது. இதில் கிருஷ்ணதேவராயர் என்ற மன்னரின் பெயரை பயன்படுத்தவே இல்லை. அவரைப்பற்றி எந்த இடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. புதிதாக 6 கதைகள் தேர்வு செய்திருக்கிறேன். மற்ற ஹீரோக்கள் படத்திலும் எனக்கேற்ற வேடம் வந்தால் நிச்சயம் நடிப்பேன். இவ்வாறு வடிவேலு கூறினார்.