‘வம்சம்’, ‘மெளன குரு’, ‘தகராறு’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மற்றும் அருள்நிதியின் தந்தை மு.க.தமிழரசு தயாரிப்பில், மோகனா மூவிஸ் பேனரில், ஜெ.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் ஜெ.சதீஷ்குமார் வழங்கிட வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’
ஒருவன் குறித்த நேரத்தில் ஒரு வேலையை ஆரம்பித்தால் அது ஒரு விதமாகவும், 2நிமிடம் தள்ளி ஆரம்பித்தால் அது இன்னொரு விதமாகவும், இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆரம்பித்தால் அது மேலும் சில மாற்றங்களுடனும் நடந்தேறும் என்பதை காமெடியாகவும், கலைரசனையுடனும் தனக்கே உரிய பாணியில், ஒரே கதையை மூன்று விதமாக காட்சிப்படுத்தி வென்றிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
அருள்நிதியின் காதலிக்கு திருவான்மியூர் சர்ச்சில் வேறொருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த விரும்பும் அருள்நிதிக்கு, அம்மணியை கடத்த சொல்லி 30 லட்சம் பணமும் தர சம்மதிக்கிறார் காதலியின் தந்தை ரவிராகவேந்தரின் தொழில்போட்டியாளர் நாசர்! கரும்பு தின்னகூலியா.?! எனக் கேட்காமல் தன் தோழன் பகவதி பெருமாள் எனும் பக்ஸ், தோழி பிந்து மாதவி உள்ளிட்டோருடன் காதலி கம் மணப்பெண்ணை கடத்த கிளம்பும் அருள்நிதி, எதிர்கொள்ளும் சோதனைகளும், சாதனைகளும் தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’.
இந்தகதையை சிவபெருமான் – நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக போரடிக்காமல் இயக்கி இருப்பதும், சிம்புதேவனுக்கு அதில் அருள்நிதி, பிந்துமாதவி, ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருந்து இருப்பது தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் பெரும்பலம்!
அருள்நிதியின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அம்மா சென்டிமெண்ட், காதலி கடத்தல் எல்லாமே சூப்பர்ப்! பிந்து மாதவியின் நடிப்பும், துடிப்பும் ஓ.கே. மற்றொரு நாயகி ஹர்சிதா ஷெட்டி நடிப்பும் கூட டபுள் ஓ.கே. சிம்புதேவனின் இயக்கத்தில், தினமலர்-சிறுவர்மலர் கூட ‘ஆடுகளம்’ நரேன் மூலம் ஒரு பாத்திரமாக பவனி வருவது செமக்யூட்!
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, நடராஜன் சங்கரனின் இசை, வைரமுத்துவின் வரிகள், ராஜா முகமதுவின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சிம்புதேவனின் இயக்கத்தில், கதை சொன்ன விதத்தில் சற்றே ”12பி” பட சாயல் தெரிந்தாலும், ”ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – ஒரு டிக்கெட்டில் 3 காமெடி படம் பார்த்த திருப்தி!”
– தினமலர் விமர்சனம்
நிமிடத்திற்கு நிமிடம் மனிதனின் விதி மாறும் என்ற கருத்தை வலியுறுத்தி வெளி வந்திருக்கும் படம் தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.
நாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு ஓடச்சொல்கிறார். அப்படி சென்றால் அவருக்கு ரூ.30 லட்சம் தருவதாகவும் கூறுகிறார்.
ஒரு புறம் அருள்நிதியின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் தனது காதலியையும் கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த டீலுக்கு அருள்நிதி ஒப்புக்கொள்கிறார். அருள்நிதியுடன் அவரின் நண்பர்களான பிந்து மாதவியும், பகவதி பெருமாளும் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கும் பணத்தேவை இருப்பதால் அருள்நிதியுடன் சேர்ந்து இந்த கடத்தலை நடத்த முடிவெடுக்கின்றனர்.
அதன்படி, அர்ஷிதாவின் கல்யாணம் நடக்கும் சர்ச்சுக்கு சென்று துப்பாக்கி முனையில் அவளை கடத்த திட்டம் தீட்டுகின்றனர். அதற்கான துப்பாக்கியை அருள்நிதியின் மற்றொரு நண்பரான கார்த்திக் சபேஸ் ஏற்பாடு செய்துகொடுக்கிறார். இரண்டு துப்பாக்கி தேவைப்படும் நிலையில் ஒரு துப்பாக்கியை மட்டுமே ஏற்பாடு செய்து கொடுக்கிறார். மற்றொன்றை வாங்க கிளம்பும் வேளையில் மின்விசிறி தலையில் விழுந்து மயக்கமடைகிறார் சபேஸ். அதனால் கடத்தலுக்கு அவரை உபயோகப்படுத்தாமல் வீட்டிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர்.
சரியாக 9.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து இறுதியில் அர்ஷிதாவை கடத்தினார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதையை மூன்று விதமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். அதாவது, 9.00 மணிக்கு அவர்கள் வீட்டை கிளம்பியதால் என்ன நடந்தது? அதேபோல் 1 நிமிடம் முன்னதாக 8.59 மணிக்கு கிளம்பினால் என்ன நடந்தது? 1 நிமிடம் தாமதமாக 9.01 மணிக்கு கிளம்பியதால் என்ன நடந்தது? என மூன்று விதங்களில் அழகாக படமாக்கியிருக்கிறார்.
நாயகன் அருள்நிதி முகத்தில் சோகம், அழுகை, காதல் என எந்த உணர்வுகளையும் காட்டமுடியாமல் தவிக்கிறார். அதேபோல் பிந்துமாதவியும் முகத்தில் நடிப்பை வரவழைக்க திணறியிருக்கிறார். பகவதி பெருமாள் தான் இருவருடைய தொய்வையும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார். அர்ஷிதா ஷெட்டி உதயம் படத்தில் பார்த்த அதே பளபளப்பு. சிறு சிறு காட்சிகளே இவருக்கு இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
ஹிப்பி லகரி என்ற வித்தியாசமான பெயரில் வரும் நாசருக்கு ஒரே இடத்தில் தான் காட்சியை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய அனுபவ நடிப்பை அவர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். போலீஸ்காரராக வரும் ‘ஆடுகளம்’ நரேன். டீக்கடை நாயராக வரும் மனோபாலா, துணி சலவை செய்பவராக வரும் சிசர் மனோகர், காய்கறி விற்பவராக வரும் பாண்டு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்த கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், அதை வேறு கோணத்தில் சிந்தித்து படத்தை எடுத்த இயக்குனர் சிம்புதேவனுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் அவனது விதி மாறுகிறது என்ற வலிமையான கருத்தை சொல்லும் விதத்தில் காமெடியை புகுத்தி ரசிக்கவும் வைத்திருக்கிறார். நடிகர்கள் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
நடராஜன் சங்கரன் இசையில் பிரேம்ஜி, கானா பாலா பாடிய அறிமுக பாடல் அருமையாக இருக்கிறது. மற்றபடி படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இடம்பெற்றுள்ளது. பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் சர்ச் காட்சிகள் அழகாக இருக்கிறது. அதேபோல், சேசிங் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ தப்பிவிடுவார்கள்.
– மாலைமலர் விமர்சனம்