‘நான் சிகப்பு மனிதன்’ – ‘ரசிகர்களிடம் வெற்றி மனிதன்!’

sikappuவிஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம், விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடித்து மீண்டும் வெளிவந்திருக்கும் படம், இவை எல்லாவற்றுக்கு மேல் லட்சுமி மேனனுடன், விஷால் தரையில் உதட்டோடு உதடு வைத்து உறியும் முத்தக்காட்சி, தண்ணீருக்குள் முழுதும் நனையும்(!) காட்சி… என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ‘நான் சிகப்பு மனிதன்’.

அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், ”அந்த” மாதிரி விஷயங்கள் என்றால் நின்றபடியோ, நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ, எந்த நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையிலேயே தூங்கி விழும் நார்கோலப்ஸி எனும் தூக்க வியாதிக்கு சொந்தக்காரர் விஷால், ஸ்கூல் டீச்சரம்மா சரண்யா பொன்வண்ணனுக்கு ஒற்றை வாரிசு. பிறந்தது முதலே லட்சத்தில் ஒருவருக்கு இயற்கையாகவே இருக்கும் இந்த தூக்க வியாதியால் அல்லல்பட்டு வரும் விஷாலுக்கு நல்ல வேலையும், நல்ல பெண்ணும் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன.? இலையுதிர் காலம் இருந்ததென்றால் வசந்தகாலமும் வந்துதானே ஆக வேண்டும்.?! அரிதான வியாதியான நார்கோலப்ஸி பர்ஸனான விஷால், மெடிக்கல் காலேஜ் பாடமாகிறார். அதன்மூலம் ஐம்பதாயிரம் பணம் சம்பாதிக்கிறார். அதை வைத்து ஒரு லேப்-டாப், அதன்மூலம் பார்ட்-டைம் ஜாப், மாசம் இருபதாயிரம் சம்பாத்தியம் என கலக்குகிறார். கூடவே பெரிய இடத்துப் பெண் லட்சுமி மேனனின் நட்பும் கிடைக்கிறது. நட்பு, காதல் ஆகிறது. எனக்கு உன் மூலம் என் மகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், அது கிடைக்குமென்றால் காசு, பணம், ஜாதி, மதம் எதுபற்றியும் கவலை இல்லை… என்கிறார் லட்சுமியின் அப்பா ஜெயப்பிரகாஷ்!

நார்கோலப்ஸி (அதாங்க திடீர் தூக்க வியாதி…) கேரக்டரான விஷாலுக்கு தான் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது தூக்கம் வந்துவிடுமே… அப்புறம் எப்படி வாரிசுக்கு வழி வகுக்க முடியும்?. லட்சுமி மேனனின் தீவிர முயற்சியால் விஷாலுக்கு தண்ணீரில் தூக்கம் வராது… எனும் உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அப்புறமென்ன? ஜலகிரீடையில்(நமக்கு காட்டப்படுவதென்னவோ வெறும் முத்தம் மட்டும் தான் ஹீ… ஹீ…!) லட்சுமி, கல்யாணம் ஆகாமலே சுமார் இரண்டு மாத கர்ப்பமும் ஆகிறார்! அப்பா ஜெ.பி.யிடம் சொல்லி, அடுத்து டும் டும் டும் தான் என இருவரும் மகிழ்வோடு இருக்கும் வேளையில், இருவரையும் சுற்றி வளைக்கும் ஒரு முரட்டு கும்பல், அதிர்ச்சியில் தூங்கும் விஷாலை அப்படியே விட்டு விட்டு, லட்சுமி மேனனை கதற கதற கற்பழிக்கிறது! விஷால் விழித்தெழும்போது கோமா ஸ்டேஜில் லட்சுமி கிடக்க, கொதித்தெழும் விஷால், தேடிப்பிடித்து முரட்டு கும்பலையும், அந்த கற்பழிப்புக்கு பின்னணியில் இருக்கும் நபரையும் கொன்று குவிப்பதும், அந்த பின்னணி நபருக்கு விஷாலுடன் என்ன பகை? என்பது தான் எதிர்பாரா திருப்பங்கள் நிரம்பிய ‘நான் சிகப்பு மனிதன்’ வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

விஷால் முன்பாதியில் தூக்க மனிதனாகவும், பின்பாதியில் சிகப்பு மனிதனாகவும் வழக்கம் போலவே… இல்லை, இல்லை… வழக்கத்திற்கு மாறாக பொளந்துகட்டியிருக்கிறார். தன் முகக்கண்கள் தூங்கியபடி இருக்க, மூளைக்கண்கள் முழித்திருக்க அக்கண், அகக்கண் எதிரேயே லட்சுமி மேனன் கற்பழிக்கப்படும் காட்சியில், விஷால் விக்கித்துப்போய் தூங்கும் காட்சியில் தன் கண்ணீரையும் நடிக்க வைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல! இது மாதிரி ஒவ்வொரு காட்சிக்கும், ஓராயிரம் முறை விஷாலின் நடிப்பை பாராட்டலாம்.

லட்சுமி மேனன், தான் கதாநாயகி என்றபோதும் நான்கு பேர் கற்பழிக்கும் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதற்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் சொல்ல வேண்டும். விஷாலின் முத்த ஆசை உள்ளிட்ட மொத்த ஆசைகளையும் நிறைவேற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் கவிநயம், கலைநயம், காதல் காவியம்!

நண்பன் கம் வில்லன் சுந்தர் ராமின் பாத்திரத்திற்கு துரோகி கருணாவின் பெயரையும், அவரது மனைவியாகவும், கோடீஸ்வரர் ஸ்ரீனிவாசனின் கள்ளக்காதலியாகவும் வரும் கவிதா எனும் இனியாவின் பாத்திரமும், அவரது பணம் பறிக்கும் பாத்திர படைப்பும் செம கொடூரம்!

சரண்யா பொன்வண்ணன், ஜெகன், பிரமிட் நடராஜன், ஜெயப்பிரகாஷ், ரிஷி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!! எப்போதும் ஜெகன், சுந்தர்ராமு உள்ளிட்டவர்களின் துணையுடன் வெளியில் போய் திரும்பும் விஷால், ப்ளாஷ்பேக் காட்சிகளில் தனித்து சுற்றுவது சற்றே லாஜிக்காக இடிக்கிறது. மற்றபடி ரிச்சர்ட் எம்.நாதனின் ஓவிய ஒளிப்பதிவு, ஜீ.வி.பிரகாஷ் குமாரின் மின்னலடிக்கும் பாடல்கள் இசை, மிரட்டும் பின்னணி இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் வித்தியாசமாக கதை சொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கும் திரு-வின் எழுத்து-இயக்கத்தில், ‘நான் சிகப்பு மனிதன்’ – ‘ரசிகர்களிடம் வெற்றி மனிதன்!’