தமிழனை சீண்டிப்பார்க்காதே! கொந்தளிக்கும் பாரதிராஜா!

baratiraja01தெனாலிராமன் திரைப்படத்தின் பிரச்சனைக் குறித்து இயக்குனர் பாரதிராஜாவின் அறிக்கை :

என் இனிய தமிழ் மக்களே…

சமீபகாலமாக தமிழ்த் திரைப்படதுறைகலைஞர்களையும், தமிழ்த் திரைப்படத்துறையையும் சீண்டிப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது.  உலக அரசியலில் பெரும் தலவர்களை கிண்டல் கேலி செய்து சித்திரம் வரைவதில்லையா? சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்து படம் எடுத்த சார்லி சாப்ளினைக் கூட குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை ஹிட்லர். கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவியாக நையாண்டி செய்த தெனாலி ராமனின் செயல்பாடுகள் கோமாளித்தனமாகத்தான் தெரியும். அப்படியொரு தெனாலி ராமனை தெனாலி ராமன் என்று சொல்லாமல் அயோத்தி ராமன் என்றா சொல்லமுடியும்.

திரைப்படங்களில் மற்ற மொழி வசனங்கள் வருகிறது என்பதற்காக, அந்த மொழியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும் என்றால் பிறகு தணிக்கைக் குழு எதற்கு? தணிக்கை செய்யப்பட்ட படத்தில் உங்களுக்கு கருத்து முரண்பாடு இருக்கிறதென்றால் நீங்கள் தணிக்கைக் குழுவிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்த்திரையுலகம் ஒற்றுமையில்லாமல் சிதறிக் கிடப்பதால் தான் ‘தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்களாக ஆகிவிடுகிறார்கள்.

’வந்தாரை வாழ வைக்கும்’ என்ற ஒற்றை வசனத்தை உச்சரித்து, நாமே நம் தமிழ் மக்கள் மீதும், தமிழ் மொழி மீதும் மண்ணை அள்ளி போட்டுவிட்டோம். வந்தாரை வாழ வைக்க நாங்கள் எப்பொழுதும் தயார். ஆனால் வாழுகின்ற எங்களை வந்தவர்கள் சீண்டிப்பார்க்கிறார்கள். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என்று வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக இருக்கிறோம். அந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளிப் போட்டு, தமிழகத்தை இன்னுமொரு மகாராஷ்டிராவாக மாற்றிவிடாதீர்கள்.

சமீப காலமாக திரையுலகில் ஏற்படும் இந்த எதிர்ப்புகள் மதம், இனம், மொழி சார்ந்து ஏதிர்க்கப்படுகிறதா? என்று புரியவில்லை. தமிழா! நீயும் நானும் சம்பாதித்தால் போதும் என்று ஜட மனிதனாகவே ஆகிவிட்டோமே நாம். இந்த நிலை நீதித்தால், தமிழினமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் ஒரே நாளில் காணாமல் போய்விடக்கூடும். இன்று தமிழன் வடிவேலுவுக்கு வைக்கப்பட்டிருக்கும் வெடி நாளை நமக்கும் வெடிக்கும். திரையுலகினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இதற்கு தீர்வு காண வேண்டும். ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்ற பாவேந்தரின் வரிகளை ஒப்புவித்தால் மட்டும் போதாது, செயல்பாட்டில் காட்டவேண்டும்.