“தங்க மீன்கள்’ படத்துக்கு 3 தேசிய விருதுகள்

61வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. அதில், இயக்குநர் ராம் இயக்கிய “தங்க மீன்கள்’ திரைப்படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் நடித்த சிறுமி சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருதும், இந்தப் படத்தில் இடம் பெற்ற “ஆனந்த யாழை…’ பாடலை எழுதிய நா. முத்துகுமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.

அண்மையில் மறைந்த பழம்பெரும் இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய “தலைமுறைகள்’ திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படமாக தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்படுகிறது.

மேலும் “வல்லினம்’ திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் வி.ஜே. சாபு ஜோசப்புக்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது கிடைத்துள்ளது. தமிழில் வெளியான “தர்மம்’ குறும்படம் சிறப்புப் பிரிவுகளின் கீழ் தேசிய விருதைப் பெற்றுள்ளது.

சிறந்த திரைப்படங்கள்: ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான “ஷிப் ஆப் தீஷியஸ்’ சிறந்த திரைப்பட விருதைப் பெற்றுள்ளது. ஹிந்தியில் வெளியான “பாக் மில்கா பாக்’ சிறந்த பொழுதுப்போக்கு திரைபடமாகவும், மலையாளத்தில் வெளியான “பேரறியாதவர்’ சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த திரைப்படமாகவும், மராத்தியில் வெளியான “துபேய தர்மா கோன்சா’ சமூகப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

“ஷாஹித்’ திரைப்படத்தை இயக்கிய ஹன்சல் மேத்தா சிறந்த இயக்குநர் விருதுக்கும், “லையர்ஸ் டைஸ்’ திரைப்படுத்துக்காக ராஜீவ் ரவி சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“நா பங்காரு தல்லி’ சிறந்த தெலுங்கு திரைப்படமாகவும், “நார்த் 24 காதம்’ சிறந்த மலையாளத் திரைப்படமாகவும், “ஜாலி எல்எல்பி’ சிறந்த ஹிந்தி திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகர், நடிகை: “ஷாஹித்’ திரைப்படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ், பேரறியாதவர் திரைப்படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சராமுடு ஆகியோர் சிறந்த நடிகர் விருதுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“லையர்ஸ் டைஸ்’ திரைப்படத்தில் நடித்த கீதாஞ்சலி தாபாவுக்கு சிறந்த நடிகை விருதும், “ஜாலி எல்எல்பி’ திரைப்படத்தில் நடித்த சௌரப் சுக்லாவுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் கிடைத்துள்ளது.

மராத்திய திரைப்படமான “அஸ்து’வில் நடித்த அம்ருதா சுபாஷ் மற்றும் “ஷிப் ஆப் தீஷீயஸ்’ திரைப்படத்தில் நடித்த அய்டா எல் கஷேப் ஆகியோர் சிறந்த துணை நடிகை விருதுக்கு கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

“பயணங்களுக்கான எரிபொருள்’

“வல்லினம்’ படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருப்பது என் அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருள் என்றார் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்.

இது குறித்து அவர் மேலும் கூறியது. இதில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குநர் அறிவழகன் ஆகியோருக்கு நன்றி. இது எனக்கு இரண்டாவது படம். விளையாட்டு தொடர்பான கதை என்பதால் படத்தின் தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பைக் கூட்ட வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்தேன். படத்தைப் பார்த்த எல்லோரும் என்னை பாராட்டினார்கள்.

அந்தச் சின்னச் சின்ன கை தட்டல்கள்தான் இந்த தேசிய விருதை தேடித் தந்திருக்கிறது. பெற்றோர்கள், நண்பர்கள் என் சினிமா பயணத்துக்கு உதவி செய்தவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சாபு ஜோசப்.

 

“பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்’

“தலைமுறைகள்’ படத்துக்கு கிடைத்துள்ள தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் தேசிய விருது மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவையே சாரும் என்று தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியது:

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படமாக தலைமுறைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இதற்கு முன் “பசங்க’ திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. தற்போது 2-ஆவது முறையாக எனது படம் இடம்பெற்றிருப்பதால் என் பணிகளை இன்னும் வேகமாகச் செய்ய இந்த விருது உதவும். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றார் சசிக்குமார்.

தந்தை-மகள் உறவுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரம்: இயக்குநர் ராம்

“தங்க மீன்கள்’ படத்துக்கு கிடைத்துள்ள தேசிய விருது தந்தை மகளுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரம் என இயக்குநர் ராம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியது: “தங்க மீன்கள்’ படத்துக்கு கிடைத்துள்ள தேசிய விருதை தந்தை-மகள் உறவுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

எனக்கு விருது கிடைத்தது என்பதை விட “தங்க மீன்கள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதும் சிறந்த பாடலாசிரியராக நா.முத்துக்குமார், சிறந்த குழந்தை நட்சத்திரமாக சாதனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி. இந்த விருது, இனி வரும் காலங்களில் நல்ல படங்களை எடுப்பதற்கு உந்து சக்தியாக என்னை முன்னெடுத்துச் செல்லும் என்றார்.

இன்னும் தரமான பாடல்களை எழுதுவேன்- நா.முத்துக்குமார்: நான் எழுதிய பாடல்களில் தந்தை-மகள் உறவின் மேன்மையைச் சொல்லும் பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் ராம் ஆகியோருக்கு நன்றி. இன்னும் தரமான பாடல்களை எழுத வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது என் தோள்களில் சுமத்தி இருக்கிறது. விருதுக்கு மதிப்பளித்து இன்னும் தரமான பாடல்களை எழுதுவேன். ராமின் மகள் ஸ்ரீ சங்கரி கோமதி, என் மகன் ஆதவன் நாகராஜன் ஆகியோருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.