தெனாலிராமனுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: முன்பதிவு துவங்கியது

tenali01அரசியல் புயலில் அடித்து வீசப்பட்ட வைகைபுயல் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுவிட்டது. தெனாலிராமன் படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டார் வடிவேலு.

சின்னக் குழந்தைகளை சிரிக்க வைக்கும் தெனாலிராமன் கதையை கையில் எடுத்து அதனை ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் பண பலத்தின் மூலம் படமாகவும் ஆக்கிவிட்டார்.

விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் வினையாய் மாறியது. தெனாலிராமன் கதைகளில் வரும் மன்னர் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு அமைப்புகள் சில கொதித்து எழ… வடிவேலுக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகள் கிளம்ப..

“என்னைய வச்சு கலவரம் கிலவரம் பண்ணிடாதீங்கப்பு”ன்னு வடிவேலு கதறுகிற நிலைமை வந்து சேர்ந்தது. இப்போது அத்தனை பிரச்சினைகளும் முடிந்து விட்டது.

படத்தில் கிருஷ்தேவராயரை அவமதிப்பாக சொல்லி மதுரை உயர்நீதிமன்றத்தில் பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வீரக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதேபோன்று சென்னையில் தொடரப்பட்டிருக்கும் வழக்கும் தள்ளுபடி செய்யப்படும் என்றே நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

இதற்கிடையில் படத்தை வருகிற 18ந் தேதி வெளியிடுவதற்கான தீவிர முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 600 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. சென்னை நகரில் மட்டும் 20 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியது.