நான் இன்னும் நடிகராகவில்லை – சிவகார்த்திகேயன் பளிச்

sivaசின்னத்திரைக்கு கைகொடுத்த வார்த்தை ஜாலத்தால், கனவுப் பிரதேசமான சினிமாவை காமெடியால் எட்டி பிடித்தவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் ஓரம் கட்டப்பட்டவர்கள் சின்னத்திரையில் தஞ்சம் அடையும் காலத்தில், எதிர்வினை புரிந்து இப்படியும் பயணிக்கலாம், என முதல் வழிகாட்டியாய், நம்பிக்கை நட்சத்திரமாய் திரைத்துறையில் மின்னி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு நேர்காணல்.

* உங்களின் தொடர் வெற்றிக்கான காரணம் என்ன?

என்னை ஒரு பெரிய நடிகராக மக்கள் ஏற்றதற்கு ரொம்ப சந்தோஷம். இந்த வெற்றிக்கு முழு காரணம் டீம் ஒர்க். பாண்டியராஜ், தனுஷ், பொன்ராஜ், முருகதாஸ் நன்றிக்குரியவர்கள்.

* சின்னத் திரைக்கும், பெரிய திரைக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிற்கும் காமெடி ஒன்று தான். ஆனால் ஆடியன்ஸ் தான் வித்தியாசம். சின்னத்திரையில் ஒவ்வொரு நாளும் ரசிக்க வைப்போம். சினிமாவை மக்கள் தேடி சென்று பார்ப்பதால், மக்கள் மனங்களில் உட்கார முடிகிறது. சின்னத்திரையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும். ஆனால், பெரிய திரையில் எல்லாவற்றிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* ஒவ்வொரு படத்தையும் எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

முதலில் கதைக்குத் தான் முக்கியத்துவம். நான் நடித்த ஒவ்வொரு படத்தை பார்க்கும் போது, இதைவிட இன்னும் நன்றாக செய்திருக்கலாமோ எனத்தோன்றும். கதைகள் குறித்து நண்பர்களுடனும் ஆலோசிப்பேன். ஆனால், முடிவு செய்வது நான் மட்டும் தான்.

* முதல் படம் 3 முதல், இப்போதைய மான் கராத்தே வரை கடந்து வந்த பாதை?

3 படம் வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மான் கராத்தே வந்திருக்கிறது. சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வந்த போது, அதற்கு தயார்படுத்துவதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கதைகளுக்கு கமிட் ஆன பின் தான் தயாராகிறேன். ஒரு படத்தில் காமெடி மற்றொன்றில் டான்ஸ், இன்னொன்றில் பைட் இப்படி ஒவ்வொன்றிலும் என்னை தயார்படுத்தி வருகிறேன். காமெடியை தாண்டி ஹீரோவாக முன்னிறுத்த நிறைய எபெக்ட் எடுக்க வேண்டியுள்ளது.

* உங்களின் பெரிய வெற்றிப்படம் எது?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான். ஏ.பி.சி., என அனைத்து சென்டர்களிலும் எல்லா தரப்பு மக்களும் பாராட்டி கொண்டாடிய படம். சில கேரக்டர்களில் நடித்திருந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கேரக்டர் மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்தது.

* அதிகமான ஆடியன்ஸ் யார்?

எதிர்நீச்சல் படத்தை இளைஞர்கள் விரும்பினார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் ரசித்தனர். மான் கராத்தேக்கு சிறுவர்களும் ஆடியன்சாக இருக்கிறார்கள். இது ஒவ்வொரு படத்திற்கும் மாறுபடுவார்கள்.

* சினிமாவிற்கு லக், உழைப்பு எது வேணும்?

உழைப்பு தான் நுாறு சதவீதம் தேவை. நான்கு நாட்கள் பிராக்டிஸ் செய்தால் நடிப்பு நன்றாக வரும். ஆனால், லக் நான்கு நாட்கள் நமக்காக காத்திருக்காது. வெளியே பார்க்கும் போது இது லக் என சொல்வார்கள். ஆனால், உழைப்பு தான் உயர்வுக்கு காரணம் என்பது உழைத்தவருக்கு தெரியும்.

* நன்றி சொல்ல விரும்பும் 3 நபர்கள் யார்?

பாண்டியராஜ், தனுஷ், தயாரிப்பாளர் மதன்.

* ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் உண்டா?

எதிர்நீச்சலில் மாரத்தான், மான் கராத்தேயில் பாக்சிங் செய்திருந்தாலும், எனக்கு ஒரு போதும் ஸ்போர்ட்சில் ஆர்வம் இருந்தது இல்லை. பள்ளியில் மரத்தை சுற்றி ஓடச் சொன்னால், நான் மரத்தின் கீழ் பதுங்குபவனாக தான் இருப்பேன். எப்போதாவது கிரிக்கெட் விளையாடுவேன்.

* பாக்சிங் பயிற்சி எடுத்திருக்கிறீர்களா?

பாக்சிங்கில் வயிற்றில் ஒரு குத்து பட்டால் ஒரு வாரம் படுக்க வேண்டியது தான். படத்திற்காக பத்து நாட்கள் பயிற்சி எடுத்திருக்கிறேன். பிட்நெஸ்சிற்காக ஜிம் பயிற்சியும் கொஞ்சம் எடுத்தேன்.

* மேக்கப்பில் ஆர்வம் இல்லையா?

ஒரு நடிகனாக மேக்கப் தேவை. ஆனால், எனக்கு விருப்பம் இல்லை. பவுடர் பூசி 15 வருஷமாச்சு. சினிமாவிற்கு தேவை என்பதால் பண்ணுகிறேன். இப்போது நான் கலர் கலர் சட்டை போடுகிறேன். வழக்கமாக ஒரு ஜீன்ஸ், பிளைன் ஷர்ட், தலையை கலைத்துவிட்டு, சாதாரணமாக நடப்பேன்.

* சினிமாவிற்காக மாற்றிய விஷயம் ஏதாவது?

நான் அமைதியான பையன். வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். யாருடனும் அதிகம் பேசமாட்டேன். அதை பார்த்து சிலர் திமிரு என சொல்வார்கள். மாற்றிய விஷயம் என்றால் அது பேச்சு தான். சின்னத்திரையில் வந்த அது, இது, எது தான் எல்லாவற்றிலும் மாற்றத்தை எற்படுத்தியது. இதை பார்த்த என் அம்மா, இது நீயா என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு நான் அமைதியானவன்.

* எந்த நடிகரை பாலோ செய்கிறீங்க?

ரஜினியின் எளிமை எனக்கு பிடிக்கும். விஜய், அஜித், சூர்யா இவர்கள் வெற்றிக்காக கடந்து வந்த பாதைகளை பார்க்கிறேன். அவற்றை பாலோ செய்கிறேன்.

* நட்பு வட்டம்?

திருச்சி இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்த போது, எனது நண்பர்கள் நீ நன்றாக மிமிக்ரி செய்கிறாய் என என்னை மேடையில் ஏற்றி விட்டனர். அந்த நான்கு நண்பர்கள் தான் எனது நட்பு வட்டம்.

* ஹன்சிகாவிற்கு ஜோடியாக நடிக்க போகிறீர்கள் என்றது கோடம்பாக்கம் குமுறியதே?

ஹன்சிகாவுடன் நடிக்க போகிறேன் என்றதும், இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் பலவிதமான வாழ்த்துக்கள் கிடைத்தது. பெரியபடம் என்பதால் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. ஹன்சிகாவுடன் நடித்தது பெரிய விஷயம்.

* உங்களின் நெகட்டிவ் என்ன?

கமர்ஷியல் படங்களில் காமெடி ஒர்க்கவுட் ஆகுது. ஆனால், மற்ற விஷயங்கள் குறிப்பாக டான்ஸ், பைட் இவற்றில் வீக். ஒவ்வொரு படங்களைபார்த்த பின் இன்னும் பெட்டரா செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இன்னும் முழுமையான ஒரு நடிகராக நான் மாறவில்லை.

* புது இயக்குனர்களின் படத்தில் தானே நடிக்கிறீர்கள்?

புதியவர்கள் என நான் பார்ப்பது இல்லை. யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஷங்கர், முருகதாஸ் இவர்களின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்.

* கமர்ஷியலா நல்ல படம் எப்போது கொடுக்க போறீங்க?

அதற்காக கதை தேர்வாகியுள்ளது. டாணா ஒரு மிரட்டலை ஏற்படுத்தும். மக்கள் விரும்பும் விதத்தில் அது இருக்கும்.

* உங்களுக்கு சம்பளம் ரூ.5 கோடியாமே?

அப்படி கொடுக்கிறவங்க யாரும் இல்லை. நானும் வாங்குறதும் இல்லை. வதந்தியை மட்டுமே கிளப்பி விடுறாங்க.