ட்விட்டரில் நுழையும் ரஜனிகாந்த் உருவாக்கும் சலசலப்பு

ட்விட்டரில் ரஜனி ஏற்படுத்தும் சலசலப்பு

 

தமிழ்த் திரை நட்சத்திரம், நடிகர் ரஜினிகாந்த் நேற்று டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கான பின் தொடர்வோர் குவிந்தனர்.

தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரமாக விளங்கும் ரஜனிகாந்த், திடீரென்று நேற்று திங்கட்கிழமை தனக்கென்று ட்விட்டர் கணக்கை ஆரம்பித்தார். இது தொடங்கிய சில மணிநேரங்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோச்சடையானை பிரபலப்படுத்தவா?

‘கோச்சடையான்’ திரைப்படம் இந்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில் நேற்று ரஜினிகாந்த் தன்னை டுவிட்டரில் இணைத்து கொண்டது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் இந்த தளத்தில் இணைந்தது வெறும் திரைப்பட விளம்பரத்துக்காக என்றும், கோச்சடையான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறாதோ என்ற அச்சத்தில்தான் அவர் டுவிட்டரில் இணைந்துள்ளார் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

டுவிட்டரில் சாதனை

இவ்வாறு விமர்சனங்கள் இருப்பினும் அவர் டுவிட்டரில் சேர்ந்து 24 மணி நேரத்தில் அவர் டுவிட்டர் கணக்கில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 100க்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேகத்தில் அவரைப் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவரது முதல் டுவீட்டில் ‘இறைவனுக்கு வணக்கம். அனைவருக்கும் வணக்கம். என் ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு மிக பெரிய நன்றி. இந்த டிஜிட்டல் பயணத்தை ஆரம்பிக்க உற்சாகமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு டுவீட் செய்தி இதுவரை 11ஆயிரத்திற்கும் அதிகமான முறை மீண்டும் மறு டுவீட் செய்யப்பட்டுள்ளது.

ரஜினி டுவிட்டரில் இணையவில்லை டுவிட்டர் தான் ரஜினியுடன் இணைந்துள்ளது என்ற நகைச்சுவையும் இணையத்தில் பிரபலமாகி வருகிறது

பாஜக தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும், செய்தி ஊடகங்களும் ரஜினியை டுவிட்டரில் பின் தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகத்தில் உள்ள முன்னணி இளம் நடிகர்கள் நடிகைகள் பலரும் ட்விட்டர் இணையதளத்தில் இணைந்து வருகிறார்கள்.

ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருந்தனர். தற்போது ரஜினி டுவிட்டரில் இணைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் போன்றோர் பேஸ் புக் போன்ற சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. -BBC