என் மீது எந்த ஹீரோக்களுக்கும் பொறாமை இல்லை! -சந்தானம் பேட்டி

santhanamAசின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் காமெடியில் பிரபலமாகி, நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம், முதன்முறையாக சோலா ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் களம் இறங்கி இருக்கிறார்.

இப்படத்திற்கான ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்த சந்தானம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி இதோ…

* நாயகனாக நடித்துள்ள முதல் படத்தை எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறீர்கள்?

நான் ஏற்கனவே அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன். அந்த படத்தில் பிரகாஷ்ராஜ்-கஞ்சா கருப்புவுடன் நான் இணைந்து நடித்தேன். அதை ஹீரோ என்று சொல்ல முடியாது. லீடு ரோல் என்று சொல்லலாம். அதையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலும் நடித்தேன்.

ஆனால் அதில் சேதுதான் ஹீரோ. இப்போது நான் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில்தான் முழு ஹீரோவாக நடித்துள்ளேன். இந்த படத்தோடு டிரைலர், ஆடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்துக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்குவார்கள் என்று நம்புகிறேன்.

* முதல் படத்திலேயே புதுமுக டைரக்டரின் படத்தில் நடித்தது ஏன்?

இந்த படத்தை இயக்கியுள்ள ஸ்ரீநாத் என் நண்பன்தான். நான் நடித்த மன்மதன் படத்திலேயே கோ டைரக்டராக பணியாற்றியவர். பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய அவர் பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு கதை இருக்கு நான் டைரக்ட் பண்றேன் நீ ஹீரோவா நடி என்பார். ஆனால், இப்ப இருக்கிற சூழ்நிலையில நம்ம ஹீரோவா நடிச்சா படம் பிஸ்னஸ் ஆகுமா? நம்மை நம்பி தயாரிப்பாளர்கள் வருவார்களா? என்கிற கேள்வி இருந்தது. ஆனால் அதன்பிறகுதான் மரியாதை ராமண்ணா படத்தை ரீமேக் செய்யலாம் என்ற யோசனை ஏற்பட்டது.

அதற்கான முயற்சி எடுத்தபோது, பிவிபி நிறுவனம் படத்தை தயாரிக்க முன்வந்தது. அதனால் தைரியமாக களமிறங்கினோம். ஸ்ரீநாத் படத்தை ரொம்ப நன்றாக இயக்கியிருக்கிறார். தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படம் இந்தி உள்பட பல மொழிகளிலும் ரீமேக் ஆனபோதும், மற்ற மொழிகளில் சில மாற்றங்கள் செய்தார்கள்.

ஆனால் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. ஒரிஜினல் படத்தில் ராஜமவுலி எப்படி எடுத்திருந்தாரோ அதேபோன்றுதான் படமாக்கியிருக்கிறோம்.

* டைரக்டர் மட்டுமின்றி மற்ற டெக்னீசியன்களையும் பிரபலமில்லாதவர்களாக இணைத்துக்கொண்டதேன்?

இவர்கள் பிரபலமில்லாதவர்களாக இருந்தாலும் திறமையானவர்கள். அதிலும் அனைவருமே எனது நண்பர்கள். அதனால் ஒவ்வொருத்தருமே படம் வெற்றி பெற வேண்டும் என்று மெனக்கெட்டுள்ளனர். பிரபலமானவர்கள் இடம்பெற்றிருந்தால் எந்த அளவுக்கு உழைத்திருப்பார்களோ அதற்கும் மேலான உழைப்பை எனது நண்பர்கள் இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே என்னை நிஜமான ஹீரோவாக்க வேண்டும் என்று உழைத்துள்ளனர். நான் எந்த சிரமமும் இல்லாமல் குதிரையில் ஏறி சவாரி செய்வது போல் ஜாலியாக நடித்திருக்கிறேன். மேலும், நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னைச்சுற்றி இருப்பதால் நான் கண்டிப்பாக ஜெயித்து விடுவேன்.

* காமெடியனாக நடித்த படங்களில் பஞ்ச் டயலாக் பேசியது போல் இந்த படத்திலும் பேசியிருக்கிறீர்களா?

ஆர்யா, ஜீவா என மற்ற ஹீரோக்களுடன் நடிக்கிறபோது பஞ்ச் பேசியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் ஹீரோவானதால் என்னால் மற்ற படங்களைப்போன்று பேச முடியவில்லை.

அதேசமயம் என்னுடன் காமெடியன்களாக நடித்துள்ள மற்ற நடிகர்களை பேச வைத்திருக்கிறேன். அதனால், எனது வழக்கமான படங்களில் இடம்பெறும் பஞ்ச் டயலாக்குகள் இந்த படத்திலும் உள்ளன. எனது ரசிகர்கள் இதை எதிர்பார்ப்பார்கள் என்பதால் இந்த படத்துக்கு கொஞ்சம் கூடுதலாகவே மெனக்கெட்டிருக்கிறேன்.

* நீங்கள் ஹீரோவானதால் உங்களுடன் நடித்த ஹீரோக்கள் பொறாமையில் இருக்கிறார்களாமே?

அப்படியெல்லாம் இல்லை. நான் ஹீரோவாக நடிக்க போகிறேன் என்று சொன்னதும், ஆர்யாதான் எனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக சொன்னார். அதோடு, நடனத்தையும் நன்கு பயிற்சி எடுக்குமாறு கூறினார்.

அதேபோல் ஜீவா, எனது ஹேர் ஸ்டைலை மாற்ற ஐடியா கொடுத்தார். இதற்கெல்லாம் மேலாக எனது காட்பாதர் சிம்புதான் இந்த படத்தின் பாடல் ட்யூன்களை செலக்ட் பண்ணினார். ஆக நான் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் அனைவருமே ஆசைப்படுகிறார்கள்.

மேலும், நான் படப்பிடிப்பில் இருந்தபோதுகூட அவ்வப்போது படத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டேயிருந்தார்கள். ஆக, அவர்கள் என் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று கூறப்படுவது உண்மை அல்ல.

* பவர்ஸ்டாரை விட்டுவிட்டு சோலார் ஸ்டாரை பிடித்தது ஏன்?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சோலார் ஸ்டாரை நான் கேள்விப்பட்டேன். அது யாரு? என்று விசாரித்தபோதுதான் டைரக்டர் இராஜகுமாரன் என்பதை தெரிந்து கொண்டேன.

அப்போதில் இருந்தே அவரை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த படத்தில் அவருக்கேற்ற ஒரு காமெடி வேடம் இருந்ததால் அழைத்தேன். அவரிடத்தில் நான் காமெடியனாக இருந்து ஹீரோவாக நடிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக இருந்து காமெடியனாக நடிக்கனும் உங்களால் முடியுமா? என்றேன்.

கண்டிப்பா நடிக்கிறேன். எனக்கும் உங்களோட நடிக்க ஆசைதான் என்று கூறினார். அப்படித்தான் சோலார் ஸ்டார் என் படத்திற்குள் வந்தார்.

* அடுத்து ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்னு நீங்கள் சொல்வதாக கூறப்படுகிறதே?

அப்படியெல்லாம் இல்லை. முதலில் டி.வியில் இருந்தேன். பின்னர் சினிமாவிற்குள் வந்தேன். காமெடியனானேன். இப்போது ஹீரோவாகியிருக்கிறேன். அடுத்து டைரக்டர்கூட ஆகலாம். என்னைப்பொறுத்தவரை சினிமாவில் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த வேலையை நான் இன்னும் நல்லபடியாக செய்ய வேண்டும் என்று நினைக்க நினைக்க ஜெயித்துக்கொண்டேயிருப்பேன். ஆனால், இவ்ளோ போதும்டா என்று உழைப்பதை நிறுத்திக்கொண்டால் என் மார்க்கெட் காலியாகி விடும். மக்கள் என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

அதனால் சினிமாவை ஒரு வேலையாக நினைத்துக்கொண்டே எதையாவது செய்து கொண்டேயிருப்பேன். ஆனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் இந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் வெளியான பிறகுதான் முடிவு தெரியும்.

* ஹீரோ- காமெடியன் இரண்டில் எதில் நடிப்பது கடினம்?

காமெடியனாக நடிக்கும்போது ரசிகர்களை சிரிக்க வைக்க ஏதாவது பஞ்ச் டயலாக் விட்டுக்கொண்டிருந்தால் போதும். அதை மட்டும் சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும.

ஆனால் ஹீரோ என்கிறபோது செண்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்சன் என பல விசயங்கள் இருக்கிறது. ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் நடிக்க வேண்டும். அதனால் என்னைப்பொறுத்தவரை காமெடியனாக நடிப்பதை விட ஹீரோவாக நடிப்பதுதான் கஷ்டம்.

* ஹீரோவாக நடிக்கும் தைரியம் எப்படி வந்தது?

பாலிவுட்டில்தான் ஹீரோக்களுக்கு இணையாக காமெடியன்களும் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக நம்முடைய சினிமாவிலும் அது வந்து விட்டது. காமெடியனை ஹீரோக்களுடன் நடனமாட வைப்பது. செண்டிமென்ட்டாக நடிக்க வைப்பது என்ன என்ற நிலை உருவாகி விட்டது.

அப்படி பல படங்களில் நடித்தபோதுதான் என்னாலும் ஹீரோவாக நடிக்க முடியும் ஜெயிக்க முடியும் என்ற மனதைரியம் ஏற்பட்டது. காமெடி மாதிரி தம் கட்டி நடிக்காமல், ஏற்றம் இறக்கத்துல ஏறி இறங்கி நடிக்கனும்.

* கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் இவர்களில் யார் சிறந்த காமெடியன்?

இதை நான் சொல்லக்கூடாது. நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

* விஜய், அஜீத், சூர்யா இவர்களில் உங்களுக்கு நெருங்கிய நண்பர் யார்?

அவர்களெல்லாம் எனது நண்பர்கள் அல்ல. அண்ணன்கள். அவர்களை நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.

* முன்னணி ஹீரோயினிகளுக்கு அண்ணன் போன்று நடித்த நீங்கள் அவர்களுடன் ஜோடி சேருவீர்களா?

அதுதான் பிரச்னையே. நான் காமெடியனாக நடித்த படங்களில் கதாநாயகிகளுக்கு அண்ணன் மாதிரிதான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதனால்தான் அப்படி நடித்து விட்டு எப்படி அவர்களுடன் டூயட் பாடுவது என்று நினைத்துதான் இந்த படத்திற்கு ஒரு புதுமுக நடிகையை ஜோடி சேர்த்திருக்கிறேன்.

* இனி ஹீரோவாக வருசத்துக்கு ஒரு படமா? இல்லை நான்கு படமா?

அதைப்பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் முடிவு செய்வேன். காமெடியனாக பண்ணும்போது எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இப்போது ஹீரோவாக நடித்திருப்பதால் படத்தோடு வெற்றியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், நிறைய டைரக்டர்கள் கதை சொல்ல வருகிறார்கள். சிலரிடம் கதை கேட்டுள்ளேன். மேலும், காமெடி மாதிரி ஹீரோ விசயத்துல உடனுக்குடன் முடிவெடுக் க முடியல.

எந்த கதையாக இருந்தாலும் யோசித்துதான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், அடுத்த முடிவை எடுப்பதற்காக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை எதிர்நோக்கியுள்ளேன் என்கிறார் சந்தானம்.