லிங்கா படப்பிடிப்பை கர்நாடகாவிலிருந்து மாற்ற மாட்டோம்: தயாரிப்பாளர் திட்டவட்ட அறிவிப்பு

lingaசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் அவரது படப்பிடிப்பை இங்கு நடத்த விட மாட்டோம் என்று சில கர்நாடக அமைப்புகள் அறிவித்து சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருகிறது. “எந்த சூழ்நிலையிலும் கர்நாடகாவிலிருந்து படப்பிடிப்பை மாற்ற மாட்டோம்” என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த எதிர்ப்பும், போராட்டங்களும் விளம்பரத்திற்காகவும், வேறு சில விஷயங்களுக்காகவும் செய்யப்படுகிறது. ரஜினி எந்த அளவுக்கு கர்நாடக மக்களை நேசிக்கிறார் என்பது கர்நாடக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கர்நாடக மக்களும் ரஜினியை அன்புடன் நேசிக்கிறார்கள். கர்நாடக முழுவதும் ரஜினியின் நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள். வீட்டுவசதிதுறை அமைச்சர் அம்ரீஷ் போன்ற அரசியல் பிரமுகர்களும் ரஜினிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எக்காரணம் கொண்டும் லிங்கா படப்பிடிப்பை கர்நாடகாவை விட்டு வேறு இடத்துக்கு மாற்ற மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லிங்கா படப்பிடிப்புகள் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. அம்ரீஷ் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரமுகர்களும் போராடும் கன்னட அமைப்புகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.