ரஜினி படத்தில் வடிவேலு – சந்தானம்?

கே.எஸ்.ரவிகுமாரின் லிங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடந்துவருகிறது. லிங்கா திரைப்படத்தின் கதை இருவேறு காலகட்டத்தில் நடக்கிறதாம். 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு பாகம்  நடைபெறுவதுபோலவும், தற்போதைய காலகட்டத்தில் மற்றொரு பாகம் நடைபெறுவதுபோலவும் திரைக்கதையமைத்திருக்கும் கே.எஸ்.ரவிகுமார், 19-ஆம் நூற்றாண்டிற்கான கதையைத்தான் தற்போது படமாக்கிவருகிறாராம்.

ரஜினியின் படங்களில் காமெடி சீன்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், படத்தின் தன்மைக்கேற்ப இரு காலகட்டங்களுக்கு இரு காமெடி நடிகர்களை நடிக்கவைக்கும் முயற்சியில் இருக்கிறதாம் படக்குழு. அந்த வகையில் வடிவேலுவிடமும், சந்தானத்திடமும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக தெரிகிறது. இருவரும் ஒப்புக்கொண்டால் ரஜினியுடன் பிளாஷ்பேக்கில் வடிவேலுவும், அடுத்த பாதியில் சந்தானமும் வலம்வருவார்கள் என்கின்றனர் லிங்கா படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள்.

 

மேலும் லிங்கா படத்திற்கு மைசூரில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும், படப்பிடிப்பித்தளத்திற்கு சுற்றுப்புறத்தில் இருக்கும் மக்கள், குசேலன் படத்தில் காண்பித்தது போல ரஜினியைப் பார்க்க ஆவலுடன் வருகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.