கோச்சடையான் முன்பதிவு பணத்தை திரும்ப கேட்டு பெங்களூரு தியேட்டர்களில் ரசிகர்கள் முற்றுகை

kochadayan 1சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் இன்று (மே 9) வெளிவருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் சில பிரச்னைகள் காரணமாக வெளிவரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கோச்டையானின் முன்பதிவு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியது. ஆனால் சில மணி நேரங்களிலேயே படம் வெளிவருவதில் சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்த தியேட்டர்கள் முன்பதிவை நிறுத்திக் கொண்டது.

ஆனால் பெங்களூர் தியேட்டர்களில் தொடர்ந்து முன்பதிவு நடைபெற்றது. பெங்களூருவில் மட்டும் 25 தியேட்டர்களில் கோச்டையான் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தனை தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கியது. 200 ரூபாய் டிக்கெட் ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களிடம் 10 முதல் 20 சதவிகிதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் படம் திடீரென தள்ளி வைக்கப்பட்டதால் ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று பெங்ளூருவின் முக்கிய தியேட்டர்களான ஊர்வசி, பாலாஜி, முகுந்தா தியேட்டர் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். படம் ரிலீசாகவில்லை என்று தெரிந்ததும் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை கேட்டு அவர்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர். உடனடியாக போலீஸ் குவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் தியேட்டர் நிர்வாகத்துடன் பேசிய பிறகு படிப்படியாக முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் கோச்சடையான் ரிலீசையொட்டி பெங்களூருவில் பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் கட்அவுட் பேனர்கள் வைத்திருந்தனர். ஊர்வசி தியேட்டர் அருகே தலைமை ரசிகர்மன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தனையும் வீணாகிவிட்டதால் ரஜனி ரசிகர்கள் கவலை அடைந்தனர். “நாங்கள் செய்த செலவு வீணானதைப் பற்றிகூட கவலைப்பட வில்லை. தலைவர் படத்துக்கா இந்த நிலை என்பதை நினைத்துதான் அதிகமாக கவலைப்படுகிறோம்” என்கிறார் கர்நாடக மாநில ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி முருகன்.