மனிதனின் பிரதான உணர்ச்சிகளில் ‘ பயம்’ ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
அதிலும் ‘பேய்’ பயம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த ‘பயத்தை’ வைத்து எத்தனையோ பேர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாய்வழிக் கட்டுக்கதைகள் , புத்தகங்கள் , பில்லி , சூன்யம், மாந்திரீக வேலைகள் என்று ஆங்காங்கே எண்ணற்ற பேய் கதைகள் உருவாகிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் இந்த பேய் பயத்தை எப்படி எதிர் கொள்வது என்று நம்மளையும் பயமுறுத்தி, படத்தில் உள்ளவர்களும் பயந்து கூடவே, நம் வயிறையும் பதம் பார்த்த படம் தான் இந்த “யாமிருக்க பயமே”.
ஒரு பேய் படத்தை கூட வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என்று நிருபித்து காட்டி உள்ளனர் இந்த படத்தின் குழு.
சரி கதை என்ன
கிருஷ்ணா தன் காதலியுடன் சென்னையில் ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்து வரும் தொழிலை, தொலைக்காட்சி மூலம் நடத்தி வருகிறார்.
இதனிடைய தன சுயநலத்துக்காக மகாநதி ஷங்கர் மகனை (பாலாஜியை) லேகியம் எடுக்கும் விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறார் கிருஷ்ணா. அவ்விளம்பரத்தில் நடித்த பாலாஜி, மாத்திரையை தான் சாப்பிட்டது மட்டுமில்லாமல் தன் தந்தை மகாநதி ஷங்கருக்கும் கொடுத்து விடுகிறார். அதன் பிறகு இருவருக்கும் ஆண்மை தன்மை குறைய நேரிடுகிறது.
உடனே மகாநதி ஷங்கர், கிருஷ்ணாவை தூக்கிவந்து மொத்து மொத்துன்னு மொத்தி, என் மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் உனது காதலியை அவனுக்கு திருமணம் செய்துவை என்று கட்டளையிடுகிறார்.
இந்த தருணத்தில் தான் கிருஷ்ணாவுக்கு, தன் அப்பாவிடம் இருந்து கடைசி காலத்தில் எழுதிய ஒரு கடிதம் வருகிறது. அதில் கொல்லிமலையில் கிருஷ்ணாவுக்கு சொந்தமான ஒரு பூர்விக பங்களா உள்ளதாகவும், மற்றபடி அங்கே வசிக்கும் கருணாவை தொடர்பு கொள்ளவும் என்று செய்தி வருகிறது.
உடனே திட்டம் தீட்டி, சென்னையை விட்டு கொல்லிமலை பங்களாவுக்கு கிளம்புகிறார், அங்கு போனதுக்கு பிறகு அந்த பங்களாவை, புதுப்பித்து ஜில் ஜில் ரெசார்ட் என்று மாற்றி, அவருக்கு உதவியாக அவருடைய காதலியான ரூபாமஞ்சரியும், கருணாகரன் மற்றும் அவருடைய தங்கையான ஓவியாவும் இருக்கிறார்கள்.
ரெசார்டாக மாற்றிய பிறகு தான் நம்மை திகிலும், சிரிப்புமாய் படம் முழுவதும் ஒரு குதூகலமான கொண்டாட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.
கடைசியில் இவர்கள் எப்படி அந்த பங்களாவை விட்டு தப்பிக்கிறார்கள் என்பதே நகைச்சுவையும், திகிலும் கலந்த இந்த “யாமிருக்க பயமே”.
கிருஷ்ணா
கழுகு படத்துக்கு பிறகு படம் முழுவதும் அவருடைய நடிப்பு கலக்கல், பேய் கிட்ட மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு சத்தியமாக சிரிக்காதவர்கள் கூட சிரித்து விடுவார்கள். காமெடி காட்சிகளும் சரி மற்றும் பயப்படும் காட்சிகளும் சரி இயல்பாகவே நடித்து உள்ளார்.
ரூபா மஞ்சரி
ரூபா கொடுத்த கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்து உள்ளார், படம் முழுக்க கிருஷ்ணாவுடன் பயணிக்க, ஒரு கட்டத்தில் அவரும் பேயாக மாறி மக்களை ஒரு மிரட்டு மிரட்டுகிறார்.
கருணாகரன்
படத்தில் இவருடைய நடிப்பு தான் செம ரகளை, அவர் வரும் அனைத்து காட்சிகளும் சிரிப்பு வெடி உறுதி, தன்னுடைய பிளாஷ் பாக் சொல்லும்போதும் சரி கண்ணாடி பார்க்காத இரகசியத்தை சொல்லும் போதும் நமக்கே பயம் வருகிறது.
“கண்ணாடி பார்த்து வாடா பண்ணி மூஞ்சி வாயா” என்று சொல்லி பேயிடம் தர்ம அடி வாங்குவது, சிரிப்பின் உச்சகட்டம்.
ஓவியா
ஒண்ணும் பெரிய அளவில் நடிப்புக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் கவர்ச்சிக்கு நல்லா உதவியுள்ளார்.
மயில்சாமி
சிறிது நேரம் மட்டும் வந்தாலும் நகைச்சுவை நடிப்பால் மனதில் நிற்கிறார் மயில்சாமி.
பலம்
ஒரு பேய் படத்தை பயமுறுத்தியும் காட்டி, அதே சமயம் படம் முழுவதும் சிரிப்பையும் வர வைத்து காட்ட முடியும் என்பதே பெரிய பலம். அதே சமயம் பேய் எப்படி வந்தது என்ற ப்ளாஷ்பேக், பேய் விரட்டுதல் போன்ற வழக்கமான காட்சிகள் இல்லாமல் சொல்ல வந்த கதையை நச்சுன்னு சொல்லியுள்ளார்கள்.
பலவீனம்
முதல் 20 நிமிடம் கொஞ்சம் தொய்வான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், இடையிடையே தேவை இல்லாத பாடல்கள்.
ஹாலிவுட்டில் இம் மாதிரியான ஹாரர் காமெடி படங்கள் இருந்தாலும், அதை மிக நேர்த்தியாகவும், நகைச்சுவை உணர்வோடும் மற்றும் பல இடங்களை ட்விஸ்ட்களோடும் கொண்டு சென்று தமிழில் புதுமை கலந்த படைப்புகளையும் தர முடியும் என்று நம் பாராட்டுகளை பெறுகிறார் இயக்குனர் டி.கே.
கண்டிப்பாக இந்த மாதிரியான படைப்பை தயாரித்த ஆர். எஸ்.இன்போடைன்மென்ட் எல்ரெட் குமார் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
மொத்தத்தில் யாமிருக்க பயமே – “பயங்கர” சிரிப்பு கொண்டாட்டம்