23ல் கோச்சடையான் ரிலீசாவது உறுதி: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

koசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் மோசர் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப் படம் வெளிவருவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

6 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது கடைசியாக வருகிற 23ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றும் வெளிவருவது சந்தேகம்தான் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 23ந் தேதி படம் வெளிவருவது உறுதி என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ரஜினிகாந்த்-தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, போஜ்புரி, மராட்டி என 6 இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 6 மொழிகளில் வெளியிடப்படும் முதல் படம் இதுதான்.

இதில் சரத்குமார், ஜாக்கி ஷராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம், கடந்த 9-ந்தேதி வெளியாக இருந்தது. தொழில்நுட்ப காரணங்களினால் படம் திரைக்கு வருவதை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் சில உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. 3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.

இதுதவிர, ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. அதன்பிறகு மேலும் 2 ஆயிரம் திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன.

3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது.

படம், வருகிற 23-ந் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23-ந் தேதி உறுதியாக வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.