தலைப்பிலேயே சஸ்பென்ஸ் – மலேசிய தமிழரின் படம்

பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் இருந்தாலும் புதுமையான கதையமைப்பைக் கொண்ட படங்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைக் பெறுகின்றன. அந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் ‘8 m m. மலேசியத் தமிழ் இயக்குநர் அமீன் இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய்,தமிழ் மொழிகளில் 12 படங்கள் இயக்கியுள்ளவர். மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிப்பவர் ஜெயராதாகிருஷ்ணன்.

 

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக நிர்மலும் நாயகியாக திவ்யாவும் நடித்துள்ளனர். மலேசிய நடிகர்கள் சிவபாலன், காந்திநாதன் போன்றோர் தவிர பலரும் புதுமுகங்களே. முக்கிய கதாபாத்திரத்தில் நாராயணமூர்த்தி போலிஸ் வேடத்தில் அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குநர் அமீனிடம் கேட்ட போது” இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். இது ஒரு அட்வெஞ்சர் பிலிம். தமிழ்ச் சினிமாவின் வழக்கமான பல விஷயங்களை தகர்த்து இப்படம் உருவாகியிருக்கிறது. திரைக்கதையின் புது உத்தியில் பயணிக்கிற படம்.” என்று கூறினார்.

மேலும் அவர், ‘இது ஒரு பயணம் பற்றிய படம். வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு காதல் ஜோடி மலைப்பிரதேசம் நோக்கிச் செல்லும் பயணம்தான் கதை. அந்த ஜோடி பயணத்தில் சந்திக்கும் சம்பவங்கள் போய்ச் சேர்ந்ததும் நடக்கும் திருப்பங்கள்தான் படம்.” என்கிறார்.

‘8எம்.எம்.’ என்று படத்தின் தலைப்பிலேயே புதிர் வைத்துள்ளாரே! இன்னும் படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு சொல்லவா வேண்டும்!

படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடக மலைப்பிரதேசங்களிலும் படமாகியுள்ளது. மலேசியாவிலும் சிலநாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ரெட் ‘5டி’ ஹெலி கேம் போன்ற கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் 4 பாடல்களுக்கு இசையத்துள்ளார் முரளி.

கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் இல்லாமல் யதார்த்தமான போக்கில் உருவாகியிருக்கும் படம் என்றும் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில் நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன,  ஜூலையில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவிக்கிறார்கள்.