குடியின் தீமைகளைச் சொல்லும் ‘அப்பா… வேணாம்ப்பா…’

பொதுவாக சமுதாயத்தில் பல பேர் குடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடி நோயாளிகள் அல்ல. தன் நிலை தெரிந்தும் குடியைவிட முடியாமல் குடித்து, குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இந்த ‘அப்பா.. வேணாம்ப்பா..’.

இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கட்ரமணன் பல தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியவர். பல ஆவணப் படங்களை இயக்கி அவை சென்னை பொதிகையில் வெளிவந்திருக்கின்றன. இவர் இயக்குனர் வேலு பிரபாகரனிடம் உதவியாளராக பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித்தொடரிலும் பணியாற்றியவர்.

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றியவர். 53 வயதிலும் ஒரு சமுதாய சிந்தனை உள்ள கதையை தேர்ந்தெடுத்து இதில் அவரே கதாநாயகனாக நடித்து இயக்கி, தயாரித்துள்ளார். முயற்சி உடையவர்களுக்கு வயது ஒரு தடை இல்லை என்பது இவருடைய உழைப்பின் மூலம் உலகிற்கு தெரியும்.

ஏறக்குறைய முற்றிலும் புதுமுக நடிக நடிகைகளைக் கொண்டு உருவான இப்படம் இந்த கால கட்டத்திற்கு மிகவும் ஏற்ற படமாகும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உருவான மிகக் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களின் வரிசையில் இதுவும் அடங்கும். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, விகே கண்ணன் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே குடி நோயாளிகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களே..அவர்கள் பல பேரை சந்தித்து அவர்கள் குடியால் இழந்தவற்றையும், திருந்தி பல பேர் வாழ்வதையும் கேட்டு தெரிந்து கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

TTK மருத்துவமனையில் மருத்துவராக பணி புரியும் டாக்டர் சிவசுப்ரமணியன் மருத்துவராகவும் மற்றும் கவுன்சிலராக சங்கரும் நடித்திருக்கிறார்கள். இம்மருத்துவமனையின் இயக்குனர் திருமதி. சாந்தி ரங்கநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு அக்கறை கொண்டு உதவி இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

இது வரை தமிழ் திரைப்பட வரலாற்றில் குடி நோய் பற்றிய திரைப்படம் இத்தனை விரிவாக எடுக்கப்படவில்லை என்னும் அளவுக்கு விரிவாக எடுத்திருக்கிறார்களாம்.