மஞ்சப்பை

manjappaiநடிகர் : விமல்
நடிகை : லட்சுமிமேனன்
இயக்குனர் : என்.ராகவன்
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு : மாசாணி

 

சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் விமல். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பெற்றோரை இழந்த இவர் சிறு வயதில் இருந்தே தாத்தாவான ராஜ்கிரண் வளர்ப்பில் வளர்ந்தவர். ஒருநாள் சிக்னலில் லட்சுமி மேனனை சந்திக்கிறார் விமல். அதிலிருந்து லட்சுமி மேனன் மீது காதல் வயப்படுகிறார். முதலில் மறுக்கும் லட்சுமி மேனன் பிறகு விமலின் வெகுளித்தனத்தைப் பார்த்து காதல் கொள்கிறார்.

அதன்பிறகு விமலுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கூடி வருகிறது. அமெரிக்கா செல்வதற்கு மூன்று மாதகாலம் உள்ள நிலையில் தன் தாத்தாவான ராஜ்கிரணை கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரவழைக்கிறார். கிராமத்தில் வாழ்ந்து வந்த ராஜ்கிரண் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் விமலுடன் தங்குகிறார். சென்னை சூழல் அறியாத இவர் தன் கிராமத்தில் வாழ்வது போல் இருந்து வருகிறார். இவருடைய நல்ல உள்ளத்தால் மற்றவர்களுக்கு செய்யும் நன்மைகூட தீமையாக மாறுகிறது. இதனால் ராஜ்கிரணை பகையாளிபோல் பார்க்கிறார்கள்.

முதலில் இதைப் பொறுத்துக் கொள்ளும் விமல், இவரின் அப்பாவித்தனமான சில செயல்களால் தன் லட்சியமான அமெரிக்கா செல்லும் வாய்ப்பும், தன் காதலையும் இழக்க நேரிடுகிறது. இதனால் கோபமடைந்து ராஜ்கிரணை உதாசனப்படுத்தி பேசி விடுகிறார்.

இறுதியில் ராஜ்கிரணை, விமல் மற்றும் எல்லோரும் புரிந்துகொண்டார்களா? லட்சுமி மேனனுடன் விமல் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ராஜ்கிரண் வெங்கடசாமி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று விமலுக்கு தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். கனமான கதாபாத்திரத்தை சுமந்து ரசிகர்கள் மனதில் கனமாக பொருந்துகிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு ராஜ்கிரண் நடிப்பில் அனைவரிடமும் பாராட்டை பெறுகிறார். குறிப்பாக விமலிடம் பாசத்தை காட்டும் காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைக்கிறது. பாசத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார் ராஜ்கிரண்.

வழக்கமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விமல். ராஜ்கிரணுடன் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. துறுதுறு பேச்சாலும், கொஞ்சும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்கிறார் லட்சுமி மேனன்.

ஆர்ப்பாட்டமில்லாமல் எளிய இசையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன். மாசாணியின் ஒளிப்பதிவு அருமை. நீண்ட நாட்களுக்குப்பிறகு ராஜ்கிரணை நடிக்க வைத்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் இயக்குனர் என்.ராகவன். தாத்தா-பேரன் உறவு மற்றும் பாசத்தை அழகான திரைக்கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘மஞ்சப்பை’ உறவுப்பாலம்.