முண்டாசுபட்டி 4 நாளில் 4 கோடி வசூல்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

mundasupattiகடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 13)ந் தேதி வெளிவந்தது முண்டாசுப்பட்டி. குறும்படமாக இருந்ததை சினிமாவாக்கினார் அதன் இயக்குனர் ராம்குமார். திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது.

சி.வி.குமார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி படங்கள் வெற்றி பெற்றது. பீட்சா 2 மட்டும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சி.வி.குமாரின் படங்களிலேயே முண்டாசுப்பட்டி தான் முதல் நான்கு நாளில் 4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டாசுபட்டியின் வெற்றியை தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தொடர்ந்து படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜாராணி, குக்கூ படங்களை தயாரித்தது பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ. இதில் வத்திக்குச்சி தவிர மற்ற படங்கள் ஹிட்டானது. இதனால் ஏ.ஆர்.முருகதாசை தொடர்ந்து சி.வி.குமாருடன் இணைந்து தொடர்ந்து படம் தயாரிக்க ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் முடிவு செய்துள்ளது.

லாஜிக் இல்லாவிட்டாலும் இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்கும் காமெடி படம் என்கிற விமர்சனங்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு. பெரும் பொருட் செலவில் செய்யப்படும் விளம்பரங்கள் இவற்றால் முண்டாசுப்பட்டி ஹவுஸ்புல்லாகிக் கொண்டிருக்கிறது. படம் 50 நாள் வரை தாக்கு பிடிக்கும் என்றும், 50 கோடி வரை வசூலிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் வட்டார தகவல் தெரிவிக்கிறது.