டைரக்டர் களஞ்சியம் படத்தில் நடிக்க மறுப்பதால் நடிகை அஞ்சலி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் கில்டு அறிவித்து உள்ளது.
களஞ்சியம் ‘ஊர் சுற்றி புராணம்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். இதில் அஞ்சலி நாயகியாக நடித்தார். படம் பாதி முடிந்த நிலையில் திடீரென அஞ்சலி வெளியேறி விட்டார். களஞ்சியம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிய அவர் இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறினார்.
ஐதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனது படத்தை முடித்து கொடுக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடிக்க கூடாது என்று களஞ்சியம் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் சங்கங்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க கில்டு பொதுச் செயலாளர் ஜாகுவார் தங்கம் கூறியதாவது:–
நடிகை அஞ்சலி டைரக்டர் களஞ்சியம் படத்தை முடித்து கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் மட்டுமின்றி வேறு எந்த மொழி படத்திலும் நடிக்க கூடாது. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பட தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதி அஞ்சலியை புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளோம்.
ஊர்சுற்று புராணம் படத்தில் அவர் நடிக்காததால் தயாரிப்பாளர் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளார். எனவே அந்த படங்களை அஞ்சலி முடிக்காமல் வேறு படங்களில் நடிக்க அனுமதிக்க கூடாது என்றும் வற்புறுத்தி உள்ளோம்.
களஞ்சியத்தின் ஊர்சுற்றி புராணம் படத்தில் நடிப்பதற்கு அஞ்சலி விரும்பாவிட்டால் அதற்கான நஷ்டஈட்டை அவர் வழங்க வேண்டும். நடித்து கொடுக்க முன்வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.