ஆயிரத்தில் ஒருவன் 100–வது நாள்: தியேட்டரில் திரண்ட ரசிகர்கள் எம்.ஜி.ஆர். கட் அவுட்டுக்கு அபிஷேகம்

ayirathil-oruvan-MGR

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 100–வது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் 1964–ல் வெளியானது. தற்போது இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் மீண்டும் ரிலீஸ் செய்தார்.

தமிழகம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சென்னை சத்யம் மற்றும் ஆல்பட் தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் தாண்டி ஓடியது. இப்படத்தின் 100–வது நாள் விழா ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது.

சிந்தாதிரிபேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து விட்டு தியேட்டருக்கு ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாயிலில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இனிப்பும் வழங்கப்பட்டது. பின்னர் தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

டைரக்டர் பி.வாசு, நடிகர் மயில்சாமி, பின்னணி பாடகி பி.சுசீலா, வசனகர்த்தா, ஆர்.கே.சண்முகம், எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் பிரதீப், உரிமைக்குரல் ராஜு, அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை பொருளாளர் டி.ஈஸ்வரன், சைதை கலை உலக தலைமை எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சைதை எஸ்.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்தனர்.