ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்து ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே வெளிவருவது வழக்கம். சில வருடங்களுக்கு முன் அப்படி கூட வராமல் இருந்தது. அவர்களுக்கேற்ற கதைகளும், பொருத்தமான ஜோடிகளும் கூட கிடைப்பது சிரமமாகவே இருந்ததாகச் சொல்லப்பட்டது.
தற்போது பல புது இயக்குனர்களின் வரவால் புதுப் புதுக் கதைகள் வெளிவந்து அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது முன்னணி நடிகர்களுக்கும் ஒரு புதிய ரத்தத்தை பாய்ச்சியது.
இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்து ‘கோச்சடையான்’ படம் ஏற்கெனவே வெளிவந்தது, இன்னும் சில மாதங்களில் ‘லிங்கா’ படம் வெளிவர உள்ளது. அதே சமயம், கமல்ஹாசன் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளது. கமல் நடித்து ‘விஸ்வரூபம் 2′ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதன் பின் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் படப்பிடிப்பில் கமல் ஜுலை மாதம் முதல் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவரும் வாய்ப்புள்ளது. அதில் முதலில் வருவது ‘உத்தம வில்லன்’ படமா அல்லது ‘விஸ்வரூபம் 2′ படமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
ஆனாலும், ஒரு படம் 50 நாட்கள் ஓடி முடிப்பதற்குள் அடுத்த படம் வெளிவந்துவிடும் என்றே தெரிகிறது. கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே ஆண்டில் மூன்று படங்கள் வெளிவர உள்ளது ஆச்சரியமான விஷயம்தான்.