திரைப்பட வாய்ப்பு குறைந்ததால் நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை

திரைப்பட வாய்ப்பு குறைந்த சோகத்தில் சென்னையில் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை புரசைவாக்கம் லெட்டாங்கஸ் சாலையில் வசிப்பவர் பால முரளி மோகன் (54). இவர் சிவாஜி, ரெண்டு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில நடித்துள்ளார். அண்மைக் காலமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.

இவரது மனைவி சுமதி (52). மகன் அபிஷேக், அமெரிக்காவில் பணிபுரிகிறார். பால முரளி அவருடைய சகோதரி ஜெயதேவி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பால முரளியின் மனைவி சுமதி, உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதன்கிழமை தாம்பரத்துக்குச் சென்றுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்த முரளி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த போலீஸார் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 6 மாதங்களாக பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் பால முரளி மன உளைச்சலில் இருந்தது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.