நட்புக்காக நடிக்கிறேன்: சமுத்திரகனி சிறப்பு பேட்டி!

Director-actor-Samudrakaniநிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான முன் தயாரிப்பில் பிசியாக இருக்கிறார். இடையில் நண்பர்கள், உதவி இயக்குனர்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தன் பால்ய நண்பனின் குடும்பத்தை தேடிப்போய் உதவி செய்து திரும்பியிருக்கிறார்.

காமராஜர் படத்தில் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதியில் நடித்து வருகிறார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி அளித்த சிறப்பு பேட்டி:

* நிமிர்ந்து நில் ரிசல்ட் எப்படி இருந்ததாக நினைக்கிறீர்கள்?

எல்லா தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைச்சுது. மீடியாக்கள் கூட அதன் ஆக்கத்தில் இருந்த சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியதே தவிர நோக்கத்தை யாரும் குறைகூறவில்லை. இயக்குனர் பாலா படம் பார்த்து விட்டு பாராட்டியதை வாழ்நாளில் மறக்க முடியாது.

* அமலா பால் நடிப்பதாக இருந்த அடுத்த படம் என்னாச்சு?

14 வயது முதல் 40 வயது வரையிலான ஒரு பெண்ணின் கதை அது. அதற்கு பொருத்தமானவர் அமலாபால்தான் என்று முடிவு செய்திருந்தேன். அதற்கிடையில் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால் அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தும் ஷ¨ட்டிங் கிளம்பிட வேண்டியதுதான்.

* காமராஜர் படத்தில் நடிக்கிறீங்களாமே?

ஆமாம். இயக்குனர் பாலகிருஷ்ணன் வந்து அதில் சேர்க்கப்பட உள்ள புதிய பகுதி பற்றிச் சொன்னார். சம்பளம் பற்றிக்கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். காமராஜர் இறந்த பிறகு அவரது வீட்டிக்கு சென்று அவரது சொத்துக்களை கணக்கெடுக்கும் விருதுநகர் நகராட்சி அதிகாரியாக நடிக்கிறேன்.

அங்கு 110 ரூபாய் பணம், ஒரு சில வேட்டி துண்டுகள், சில புத்தங்கள் மட்டுமே இருக்கிறது. மூன்று முறை முதல்வராக இருந்தும் தன் குடும்பத்தை வறுமையில் வைத்திருந்த மகத்தான தலைவனின் துண்டு ஒன்றை மட்டும் கேட்டு வாங்கி வருகிறேன்.

எனது பார்வையில் படம் தொடங்கி என் பார்வையில் முடிகிற மாதிரி அமைத்திருக்கிறார்கள். அந்த மகத்தான தலைவனுக்கு என்னால் முடிந்தது இது.

* சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் இமேஜ் பாதிக்காதா?

நான் என்ன பெரிய ஹீரோவா. முதலில் இயக்குனர் அப்புறம் நடிகர். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்குமான இடைவெளியில் நடிக்கிறேன்.

பூவரசம் பீ பீ எனது உதவியாளர் இயக்கிய படம் அதனால் நடித்துக் கொடுத்தேன். அடுத்து சரத்குமார் சாரின் சண்டமாருதம் படத்தில் நடிக்கிறேன். எனது நிமிர்ந்து நில் படத்தில் அவர் நடித்துக் கொடுத்தார். அதற்கான நன்றி கடனை தீர்க்கிறேன்.

* நடிக்கும் வேறு படங்கள் பற்றி…?

தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரியில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். நீயெல்லாம் நல்லா வருவடா படத்திலும் முக்கியமான கேரக்டர். காடு என்ற படத்தில் காட்டை காக்கும் சமூக ஊழியனாக நடித்திருக்கிறேன்.

* எப்போதும் ஒரு கோபக்கார இளைஞன் போன்றே தோற்றம் தருகிறீர்களே?

சமூகத்தின் மீது தீராத பல கோபங்கள் இருக்கிறது. அதனை எழுத்தாளனாக இருந்திருந்தால் எழுதி தீர்த்திருப்பேன். ஓவியனாக இருந்தால் வரைந்து தீர்த்திருப்பேன். சினிமா கலைஞனாக இருப்பதால் திரைப்படங்கள் மூலம் தீர்த்துக் கொள்கிறேன். கோபம் இன்றி இருக்ககூடிய சந்தர்ப்பந்தத்தை இந்த தேசம் எனக்குத் தரவில்லை.

* நீங்கள் நடித்த மலையாளப் படம் ஒன்று பிரச்னைக்குள்ளானதே-?

வசந்தத்தின்ட கனல் வழிகளில் என்கிற படம். கேரளாவில் கம்யூனிசத்தை உருவாக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணபிள்ளை கேரக்டரில் நடித்தேன். அவரை கேரளத்து சேகுவேரா என்று அழைக்கிறார்கள். கேரள அரசியல் பிரச்னைகளால் அந்த படம் ரிலீசாவது தடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் திரையிடலாமா என்று யோசித்து வருகிறேன்.

* தமிழ் சினிமாவின் பயணம் சரியான பாதையில் இருப்பதாக கருதுகிறீர்களா?

மாற்று பாதையில் செல்வதாக நினைக்கிறேன். பிரபு, ராம்கி, மோகன் மாதிரியான மிடில் ஹீரோக்களின் படங்களே இப்போது மறைந்து விட்டது.

ஒன்று 50 கோடிக்கு மேல் தாயாராகும் பெரிய ஹீரோக்கள் படம், இல்லாவிட்டால் ஒரு கோடிக்குள் தயாராகும் சின்னப்படம். பெரிய படங்கள் தோல்வியும் அடைகிறது. சின்ன படங்கள் வெற்றியும் பெறுகிறது. இதைத்தான் மாற்று பாதை என்று குறிப்பிடுகிறேன்.

* திடீரென நண்பர் குடும்பம் ஒன்றை தத்தெடுத்திருக்கிறீர்களாமே?

சமீபத்தில் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படம் பார்த்தேன். அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது. சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு தங்க இடம் கொடுத்து சாப்பாடு போட்டு பராமரித்த நண்பன் குருசாமியின் நினைவு வந்தது.

சினிமாவில் எனக்கு நம்பிக்கையூட்டிவிட்டு அவன் நம்பிக்கை இழந்து செத்தும்போனான். அவன் நினைவு வந்ததும். அவன் ஊருக்குச் சென்றேன். குடும்பம் வறுமையில் இருந்தது. குருசாமி சினிமாவில் ஜெயித்திருந்தால் அந்த குடும்பத்துக்கு என்ன செய்வானோ அதை செய்ய முடிவெடுத்தேன். அதை செய்தும் வருகிறேன்.

* ஹீரோவாக நடிப்பீர்களா?

நிறைய பேர் கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு நல்லது சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன். என் உயரம் எனக்குத் தெரியும்.

இவ்வாறு சமுத்திரகனி கூறியுள்ளார்.