தரமான திரைப்படத்துக்கு எப்போதும் வரவேற்பு: என்.ராகவன்

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படத்துக்கு மக்கள் எப்போதும் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு மஞ்சப்பை திரைப்படமே சாட்சியாகும் என அப் படத்தின் இயக்குநர் என்.ராகவன் கூறினார்.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மஞ்சப்பை திரைப்படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இப் படத்தின் இயக்குநர் மதுரையைச் சேர்ந்த என்.ராகவனுக்கும், படத் தொகுப்பாளரும் அவரது சகோதரருமான தேவாவுக்கும் ஞானபீடம் இலக்கியப் பேரவை சார்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றி திரைப்பட இயக்குநர் என்.ராகவன் பேசியதாவது: சாதாரணமாக இருந்த என்னை திரைப்படக் கலைஞனாக மாற்றியது பள்ளிப் பருவம்தான். ஆசிரியர்களே என்னை சிற்பமாகச் செதுக்கினார்கள்.

நான் பயின்ற மதுரைத் தொழிலாளர் நல உரிமைக் கழக மேல்நிலைப் பள்ளியில், “பள்ளியால் எனக்குப் பெருமை, என்னால் பள்ளிக்குப் பெருமை’ என வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. அந்த வாக்கியத்தைப் படிக்கும் மாணவர்களுக்குள் புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அது இருந்தது.

தமிழகத்தில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்படும் தரமான திரைப் படங்களுக்கு மக்கள் வரவேற்பளித்தே வந்துள்ளனர். அந்தவகையில், மஞ்சப்பை திரைப்படமும் தரமாக குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டதால் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகவே, இனிமேல் நான் இயக்கும் திரைப்படங்கள் யாவும் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையிலே இருக்கும் என்றார்.