தமிழில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே. பாலசந்தர், தெலுங்கில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே.விஸ்வநாத் இருவரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துள்ளார்கள்.
கே. விஸ்வநாத், தமிழ், தெலுங்கில் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். கே. பாலசந்தர் ‘ரெட்டைச் சுழி’ என்ற படத்தில் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இந்த இரு சிறந்த இயக்குனர்களும் முதன் முறையாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த இரு இயக்குனர்களுமே கமல்ஹாசனை வைத்து தமிழ், தெலுங்கில் மிகச் சிறந்த படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனை வைத்து கே. பாலசந்தர் “அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், உன்னால் முடியும் தம்பி” ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் “சாகர சங்கமம், சுவாதி முத்தியம்” போன்ற படங்களில் கமல்ஹாசன் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தன்னை வைத்து மிகச் சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குனர்களை முதன் முறையாக நடிகராக தான் நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார்.
“எங்களது காலத்தில் நாங்கள் இருவரும் அவரவர் படப்பிடிப்பில் மாறி மாறி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அவரிடம் நானும், என்னிடம் அவரும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவேயில்லை.
இருவரும் மிகவும் பிஸியாகவே இருந்தோம். இப்போது நாங்கள் இருவரும் இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவரையும் சம்மதிக்க வைத்து இந்த படத்தில் கமல்ஹசான் நடிக்க வைத்தார்.
இந்தக் கால நடிகர்களுடன் நடித்தது சுவாரசியமாக இருந்தது,” என பாலசந்தருடனான நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார் இயக்குனர் கே. விஸ்வநாத்.