இந்த மாதம் எக்கச்சக்க படங்கள் வெளியீடு!

t cinemaபடங்கள் ஓடுகிறதோ இல்லையோ மாதந்தோறும் டஜன் கணக்கில் படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் முடிய 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் ஒரு சில படங்களே வெற்றி. மற்றவை தோல்விப்படங்கள். ஆனாலும் நாளுக்கு நாள் தயாராகும் படங்களின் எண்ணிக்கையும், வாரம் வாரம் வெளியாகிக் கொண்டிருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

இந்த மாதம் சுமார் 15 படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் விக்ரம் பிரபு நடித்துள்ள அரிமா நம்பி இன்று (ஜூலை 4-ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது. ஞான ராஜசேகரன் இயக்கியுள்ள ராமானுஜன், லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நளனும் நந்தினியும் ஆகிய படங்கள் 11-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

தனுஷ் தயாரித்து, நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவியின் பூலோகம் ஆகிய படங்கள் 18-ஆம் தேதி வெளியாகின்றன. இந்தப் படங்கள் தவிர கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ், கரண் ஹீரோவாக நடித்துள்ள சூரன், ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள நம்பியார், விஜய் ஆன்டனி நடித்துள்ள சலீம், சித்தார்த் ஹீரோவாக நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா, நட்ராஜ் நடித்துள்ள சதுரங்க வேட்டை, நவீன் சந்திரா நடித்துள்ள சரபம், கஞ்சா கருப்பு தயாரித்து நடித்துள்ள வேல்முருகன் போர்வெல் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்திருக்கும் பப்பாளி ஆகிய படங்களும் இந்த மாதம் வெளிவர தயார்நிலையில் உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவை தவிர சுமார் அரைடஜன் சிறு முதலீட்டு படங்களும் இம்மாதம் வெளிவரத் தயாராக இருக்கின்றனவாம். மொத்தத்தில் 15க்கும் மேற்பட்ட படங்கள் இம்மாதம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகின்றன.

எத்தனை படங்கள் வெளியானால் என்ன? வெளியாகும் படங்கள் வெற்றிபெற்றால் மட்டுமே சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்!