ஒரே படத்தில் 6 விதமான கேமராக்களை பயன்படுத்திய மலேசிய தமிழ் இயக்குனர்!

aminமுற்றிலும் புதுமுகங்களைக்கொண்டு மலேசியாவைச்சேர்ந்த தமிழர் அமின் இயக்கும் படம் 8 எம்.எம்., ஆள் கடத்தலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் 6 விதமான கேமராக்களை பயன்படுத்தி படமாக்கியுள்ளார்களாம்.

இதுபற்றி படத்தின் இயக்குனரான அமின் கூறுகையில், சினிமாவில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. அதனால், இந்த படத்தில் ஆள் கடத்தல் பிரச்னையை கையிலெடுத்திருக்கிறேன். ஆள் கடத்தல் என்பது இன்றைக்கு நாட்டில் பல விசயங்களை முன் வைத்து நடக்கிறது.

இதில் ஒரு அதிரடியான விசயத்தை கதை பண்ணியிருக்கிறேன். இதுபற்றி இப்போது சொன்னால் படத்தின் சுவராஸ்யம் குறைந்து விடும் என்பதால் என்னால் அதை ஓப்பனாக சொல்ல முடியவில்லை.

மேலும், ஆள் கடத்தல் என்பது நாட்டில் நடக்கிற சம்பவம்தான் என்றாலும், இந்த படத்தைப்பொறுத்தவரை உண்மைக்கதையை படமாக்கவில்லை. கற்பனையாக ஒரு விசயத்தை எடுத்து அதை இன்றைய இளவட்ட ரசிகர்கள் விரும்பும் வகையில், த்ரில்லிங்காக படமாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் அடுத்த என்ன நடக்குமோ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துக்கொண்டேயிருக்கும். கூடவே பயமும் அவர்களை துரத்தும்.

அந்த வகையில், இந்த படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மும்பை மற்றும் மலேசியா என பல ஏரியாக்களில் படமாக்கியிருக்கிறேன்.

நிர்மல்-திவ்யா என்ற புதுமுகங்கள் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தின் கதை மலேசியாவுக்கு செல்லும்போது இரண்டு மலேசிய தமிழ் நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் சிவபாலன், காந்தி நாதன் என்ற இரண்டு பேரையும் முக்கிய கேரக்டர்களில நடிக்க வைத்திருக்கிறேன்.

இவர்கள் இரண்டு பேரும மலேசியாவில் பெரிய நடிகர்கள். மேலும், வழக்கமான சினிமாக்களில் இடம்பெறும் டூயட், கானா, அயிட்டம் என்ற பாடல்கள் இப்படத்தில் இல்லை. கதை போகிற போக்கில் பாடல்கள் வந்து செல்லும் என்று சொல்லும் டைரக்டர் அமின், இந்த படத்தில் இன்னொரு புதுமையை செய்திருக்கிறேன்.

அதாவது, ரொமான்ஸ், செண்டிமென்ட், ஆக்சன், சேஸிங் என காட்சிகளுக்கேற்ப சில மாறுபட்ட கேமராக்களை வைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் சக்திவேல் சில காட்சிகளில் ஹெலிகாப்டரில் இருந்தும் படமாக்கியுள்ளார்.

அந்த வகையில் ஒரே படத்தில் 6 வகையான கேமராக்களை முதன்முதலாக நாங்கள்தான் படமாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்று சொல்லும் அமின், இந்த 8 எம் எம் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்கிறார்.