பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

perarivalan_cinemaஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது.

இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதற்கு வாய்மை என பெயரிட்டுள்ளனர்.இதில் முருகன் வேடத்தில் டைரக்டர் பாரதிராஜா மகன் மனோஜ் நடிக்கிறார். பேரறிவாளன் வேடத்தில் டைரக்டர் பாக்யராஜ் மகன் சாந்தனுவும், சாந்தன் வேடத்தில் டைரக்டர் பாண்டியராஜன் மகன் ப்ரித்வியும் நடிக்கின்றனர்.

பேரறிவாளன் விடுதலைக்காக போராடும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். கவுண்டமணியும் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். இப்படத்தை செந்தில்குமார் இயக்குகிறார்.