சமந்தா தெலுங்கு சினிமாவில் களமிறங்குவதற்கு முன்பு வரை அனுஷ்கா, தமன்னா இருவரும்தான் அங்கு முன்னணி வகித்து வந்தனர். ஆனால், சமந்தா நடித்த சில படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால், முன்னணி ஹீரோக்களெல்லாம் அவர் பக்கம் சாய்ந்து விட்டனர்.
அதனால்தான், அனுஷ்கா, தமன்னா இருவருக்குமே அங்கு சரிவு ஏற்பட்டு, கோலிவுட்டில் தஞ்சமடைந்தனர்.
இருப்பினும், தற்போது தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி என்ற இரண்டு மெகா சரித்திர படங்களை கைப்பற்றி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள அனுஷ்கா, ரசிகர்களுடன் பேஸ்புக் தொடர்பிலும் இருக்கிறார். அவ்வப்போது தன்னைப்பற்றிய சுவராஸ்ய செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், 2007ம் ஆண்டில் இருந்து ரசிகர்களுடன் தொடர்பு கொண்டுள்ள அனுஷ்காவின் பேஸ்புக்கை இதுவரை 60 லட்சம் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஆனால், 2011ம் ஆண்டில் இருநது பேஸ்புக் கணக்கு தொடங்கிய சமந்தாவுக்கோ மூன்றே ஆண்டுகளில் 58 லட்சம் ரசிகர்கள் லைக் செய்து தொடர்பில் உள்ளார்களாம்.
இதற்கு காரணம், தெலுங்கு சினிமாவில் ஒரு முறை மகேஷ்பாபுவின் படம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை சொன்னதோடு, மோடி பிரதமராவதற்கு முன்பே அவர் பிரதமராக வேண்டும் என்று வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார் சமந்தா.
இதுபோன்ற சில பரபரப்பான தகவல்களை அவர் வெளியிட்டு வந்ததால், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்திழுத்து விட்டார். அதனால்தான் 7 ஆண்டுகளில் 60 லட்சம் லைக்குகளை அனுஷ்கா பெற்றுள்ள நிலையில், சமந்தாவோ 3 ஆண்டுகளிலேயே 58 லட்சம் லைக்குகளை பெற்று அவரை முந்திச்சென்று கொண்டிருக்கிறார்.