கோச்சடையான் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அவர் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தவர்கள் இப்போது ஐதராபாத்தில் சரித்திரகால செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். முதலில் அரண்மனை செட் அமைத்து படமாக்கியவர்கள், இப்போது ஒரு பாடல் காட்சிக்காக ரஜினி விண்கலத்தில் நடந்து செல்வது போன்று படமாக்கி வருகின்றனர்.
இதற்கிடையே வில்லன்களுடன் ரஜினி மோதும் அதிரடி சண்டை காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரஜினி படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்து விட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. அதோடு, சண்டை காட்சியில் டூப் நடிகரை யூஸ் பண்ணாமல் ரஜினி ரிஸ்க் எடுத்ததினால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.
ஆனால், இப்போது அந்த செய்தியை மறுத்துள்ளார் அப்பட டைரக்டரான கே.எஸ்.ரவிக்குமார். அவர் பேஸ்புக்கில் விடுத்துள்ள செய்தியில், ரஜினி மயக்கம் போட்டு விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வெளியான செய்திகளில் கொஞ்சமும் உண்மையில்லை. அவர் எப்போதும் போலவே படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். யாரோ தேவையில்லாமல் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்கள். அதனால் இதை யாரும் நம்ப வேண்டாம் எனறு கேட்டுக்கொண்டுள்ளார்.