இசை ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யாமல், விலைகொடுத்து சி.டி வாங்கினால், வாரம் ஓர் இசை ஆல்பம் வெளியிடத் தயார் என இசையமைப்பாளர் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரசிகர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இளையராஜா தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் ரத்னகுமார், சுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா பேசியது:
ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன.
ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன். இங்கு கூடிய இசைஞானி பேன்ஸ் கிளப் கூட்டத்தின் நோக்கம் இசையை வளர்ப்பது, ஆன்மீகத்தை காப்பது, சமூக சேவைகளை மக்களுக்கு செய்வது, மரக்கன்றுகள் நடுவதோடு, பொதுச் சேவையோடு, நாட்டை சுத்தமாக வைப்பதோடு, மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள், எனது பெயரில் என் அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள், இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதுபோல், ரசிகர்கள் 20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளீர்கள், நீங்கள் மட்டும் எனது பாடல்களை இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்யக்கூடாதென உறுதி மொழி எடுங்கள். நீங்கள் புதிய பாடல்கள் வேண்டுமென்று 20 லட்சம் பேர் பதிவு செய்தால், அடுத்தநாளே ஒரு ஆல்பம் வெளியிடவும், மேலும், வாரம் ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும் என்றார்.
மேலும், அடுத்தடுத்து, ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் இளையராஜா தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குநர் ஆல்பர்ட், ரேணுகா மில் மோகன், மற்றும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் மட்டும் கருத்தரங்கில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இதுவரை இயங்கிவந்த பல ரசிகர் மன்ற குழுக்கள் இசைஞானி பேன்ஸ் கிளப்பில் இணைக்கப்பட்டன. நிறைவில் தேனிகண்ணன் நன்றி தெரிவித்தார்.