பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை! தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்பு

pulipaarvai-filmதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை ‘புலிப்பார்வை’ திரைப்படத்தில் ஒரு ‘சிறார் போராளியாக’ சித்தரிக்கும் தமிழ் சினிமாக்காரர்களின் சதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையின் முள்ளிவாய்க்கால் போர்க்களத்துடன் முடிவடைந்தன. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் வேட்டையாடி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும், சரணடைந்த போராளிகளும் முள்வேலி முகாம்களில் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உலகை உலுக்கும் ஒரு படம் வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரோடு இராணுவ முகாமில் இருப்பதும் பின்னர் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பதுமான அக்காட்சி, இலங்கையின் முக்கிய போர்க்குற்ற ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “புலிப் பார்வை” படத்தின் முன்னோட்ட காட்சிகள் அனைத்திலுமே பாலச்சந்திரன், புலிகள் இயக்க சீருடையில் இருப்பது, ஆயுதமேந்தி இருப்பது, இராணுவ பயிற்சி மேற்கொள்வது என்று போராளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்திடம் சிக்கிய போது மேலாடை கூட இல்லாமல்தான் இருப்பதாக உண்மை புகைப்படம் சொல்ல.. புலிப்பார்வை படத்திலோ, புலிகள் இயக்க சீருடையிலேயே இருந்து சுற்றி வளைக்கப்படுவது போல காட்டப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசும் சுப்பிரமணியன் சுவாமிகளும் சொல்வதை நிரூபிப்பது போல, பாலச்சந்திரனை புலிகள் இயக்க போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை.

அத்துடன் சிறுவர்களை புலிகள் தங்களது இராணுவத்தில் இணைத்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதாகவும் சித்தரிக்கிறது புலிப் பார்வை.

இலங்கை அரசிடமும் தமிழின உணர்வாளர்களிடமும் அனுமதி பெற்று படம் எடுத்தோம் என்று புலிப்பார்வை படக் குழு கூறிக் கொள்வது வினோதமாக இருந்தாலும் சித்தரிப்புகள் அனைத்துமே உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது தமிழின உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஏற்கெனவே சந்தோஷ் சிவன் தன் பங்குக்கு இனம் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.

அப்பட்டமான அந்த சிங்கள ஆதரவுப் படத்தை, என்ன ஏது என விளங்கிக் கொள்ளாமலேயே தூக்கிப்பிடித்தவர்கள்தான் தமிழ் சினிமாக்காரர்கள்.

இப்போது புலிப்பார்வையும் அந்த ஈனப் பட்டியலில் சேரும் போலத் தெரிகிறது!

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது  சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா, பிரபாகரன்  – மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல்   சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் குண்டுகளால்  துளைத்து மண்ணில் சாய்ந்தது வரைக்குமான வாழ்க்கை , ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்த்தின்  எழுத்து இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்க, புலிப் பார்வை என்ற பெயரில் திரைப்படமாக வருகிறது என்பது தெரிந்த செய்திதான் .

ஆனால் இந்தப் படம் உண்மையில் பாலச்சந்திரனை கேவலப்படுத்தி சிங்கள அரசு சொல்லும் கட்டுக்கதைகளுக்கு தமிழகம் கொடுக்கப் போகிற வஞ்சக சாட்சியாகவே இருக்கிறது என்று ஈழத் தமிழர்களும் இன உணர்வாளர்களும் கொந்தளிக்கின்றனர்  என்பதுதான் எதிர்பாராத திருப்பம்.

தமிழகம்  வாழ் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் முக நூல் மூலமாக நம்மை தொடர்பு கொண்டு தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

“பாலச்சந்திரன் என்ற பால் மணம் மாறாத பாலகன் இனவெறி காரணமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டான் என்பதால்தான் அவனது மரணம் உலகத்தையே கண்ணீர் விட வைத்தது. ஆனால் இந்தப் படத்தில் பாலச்சந்திரன் விடுதலைப் புலிகளின் இராணுவ உடையை அணிந்து கொண்டு இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. நிஜத்தில் பாலச்சந்திரன் ராணுவசீருடையில் இருந்ததுபோல ஒரு புகைப்படத்தையாவது காட்டமுடியுமா ?” என்பது உணர்வாளர்களின் முதல் கேள்வி .

“ஒரு போலீஸ்காரர் மகன் சிறுவயதில் சந்தோஷத்துக்காக போலீஸ்காரர்  போல உடை அணிவது இல்லையா ? அப்படி திரைக்கதையின் அழகுக்காக பாலச்சந்திரனை அந்த உடையில் சித்தரித்து இருக்கலாமே..” என்று நான் கேட்க , அதற்கு அவர்கள் “தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் படத்தின் டிரைலரில் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போல ஒரு நொடி கூட வரவில்லையே” என்றார்கள்.


“எல்லாவற்றையும் டிரைலரில் போட முடியாது அல்லவா? படத்தில் இருக்கலாமே?” என்றேன் நான்.

“சரி….உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். ராணுவசீருடையில்காட்டுவதுஒருபக்கம்இருக்கட்டும். ஆனால் அவன் கையில் துப்பாக்கியுடன் களமாடுவது போல புகைப்படம் இருக்கிறதே .அதற்கு என்ன அர்த்தம்? அவனுக்கு தலைவர் பிரபாகரன் ஆயுதப்பயிற்சி கொடுப்பது போன்ற காட்சிகளும் பாலச்சந்திரன் இயந்திரத்துப்பாக்கியை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவது போலவும் காட்சிகள்இருக்கிறதே . அதற்குஎன்னஅர்த்தம் ?

அவனும் விடுதலைப் போராட்ட வீரன் அதாவது போராளி அதாவது தீவிரவாதி!  எந்த வயதுள்ளவர்களாக இருந்தாலும் களமாடுபவர்கள் போர்க்களத்தில் கொல்லப்படுவது சகஜம்தான். எனவே பாலச்சந்திரன் கொல்லப்பட்டதில் இனத்துவேஷமோ , அநியாயமோ அக்கிரமமோ எதுவும் இல்லை என்ற சிங்கள அரசின் வாதத்துக்கு வலுசேர்க்கும் அயோக்கியத்தனம் தானே இது  ?” என்கிறார்கள் அவர்கள்.

“முழுப் படத்தையும் பார்க்காமல் இப்படி முடிவு செய்வது சரியா ? “என்றால் ” ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் . படம் எப்படி இருக்கும் என்பதுதான் டிரைலரிலும் புகைப்படங்களிலும் தெரிகிறதே ” என்கிறார்கள்

தொடர்ந்து பேசும்போது “பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று ஒரு பொய்யை சொல்லி வருகிறது இலங்கை அரசு. பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியானபோது “பாலச்சந்திரன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை. அவன் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளி” என்று சுப்பிரமணிசாமியிடம் இருந்து அபாண்டமான பொய் அறிக்கை வந்தது. அதை நியாயப்படுத்துவது போல இந்தப் படத்தில் காட்சிகள் இருக்கின்றன.


இந்தப் படம் வெளி வந்தால், ‘பார்த்தீர்களா ? கைதுசெய்யப்பட  புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச்செல்லமுயன்றதால்தான் நாங்கள் சுட்டுக்கொன்றோம் என்பது இப்போதாவதுபுரிகிறதா?”என்று இந்தப்படத்தைவைத்தே இலங்கை அரசு தாங்கள் செய்த  பஞ்சமாபாதகத்தை நியாயப்படுத்திக்கொள்ளும். அதற்குதான் இந்தப் படம் எடுக்க்கப்படுகிறதா?” என்று கேட்டபோது நம்மிடம் பதில் இல்லை.

மேற்கொண்டு அவர்கள் சொல்லும் சில விசயங்கள்தான் பகீர் ரகம்

“இந்தப் படத்தின் சில காட்சிகள் இலங்கை அரசின் உதவியோடு இலங்கையிலேயே படமாக்கப்பட்டதாக ஒரு செய்தி வருகிறது . இந்த கதையை இலங்கை தூதரகத்தில் கொடுத்து ஆலோசனை பெற்றதாகவும் முழுக் கதையையும் சென்சார் போர்டிடம் முன்பே காட்டி ஒப்புதல் பெற்றது கூட அவர்களின் வழிகாட்டுதல்படிதான் என்றும் செய்திகள் வருகின்றன.” என்கிறார்கள்  உறுதியோடு பாலச்சந்திரன்    இதையெல்லாம் இந்த குற்றச் சாட்டுகள் எல்லாம் உண்மை அல்ல என்றால் ..உண்மையிலேயே பாலச்சந்திரன் என்ற கள்ளங்கபடில்லாத சிறுவன் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டதை உலகுக்கு மனிதாபிமானத்தோடு சொல்வதுதான் புலிப் பார்வை படத்தின் நோக்கம் என்றால் …

அதை தெளிவாகவிளக்க வேண்டிய கடமை படக்குழுவுக்கு இருக்கிறது .

காரணம்.. துரோகங்கள் தொடர்ந்து வெல்வதில்லை!

திரைப்பட விமர்சகர்
ராஜதிருமகன் சு.செந்தில்குமார்