தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ள வாரிசுகள்…! – ஸ்பெஷல் ரிப்போர்ட்

peranகாலத்தால் அழியாத எண்ணற்ற காவிய படங்களை தந்து, இன்றும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் பல நடிகர்கள் குடி கொண்டுள்ளனர். பேசாத படம் வந்த போதும், இன்றும் அவர்களைப் பற்றி பேசி கொண்டு இருக்கிறோம். சோதனைகளை சாதனைகளாக்கி, பேசும் படம் வந்த போது, தங்களது குரலால், யதார்த்த நடிப்பால், கதையால், கண்ணீரை வர வைத்தவர்கள் பல நடிகர்கள். பாகவதர் காலம் தொடங்கி, சிவாஜி, ஜெய் சங்கர், ஜெமினி கணேசன் என்று தொடர்ந்து, அடுத்து ரஜினி, கமல் அதற்கடுத்து கார்த்தி, பிரபு, ஆனந்த பாபு, அடுத்து அஜீத், விஜய், சிம்பு, இப்போது கெளதம் கார்த்திக், விக்ரம் பிரபு என்று தலைமுறைகள் பல கடந்து தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் வாரிசுகள் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

கருப்பு வெள்ளை தொடங்கி, கலர் படம் வரையில் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 7வது தலைமுறையை சந்தித்து வருகிறது. சினிமா குடும்பத்தில் இருந்து வந்து சிலர் சோபித்து இருக்கிறார்கள், சிலர் போராடி வருகிறார்கள், சிலர் வேறு துறைக்கு வெளியேறி விட்டார்கள். இப்போது தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்கள் சிலரை பற்றி பார்ப்போம்.

சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு

அமெரிக்காவில் படித்து, சினிமாவில் சேர தன்னை முறைப்படி வளர்த்து கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் விக்ரம் பிரபு. தன் தாத்தா சிவாஜி, தந்தை பிரபு ஆகியோரது பெயரை கெடுக்க மாட்டேன் என்று சினிமாவுக்கு வரும் போதே சொன்னார். அமெரிக்காவில் படித்து வந்தாலும், பிரபு சாலமன் சொன்னது போல கும்கி படத்தில் அறிமுகமாகும் போது, பல முறை யானையை குளிப்பாட்டி சாணம் ஆள்ளியது குறிப்பிடத்தக்கது. முதல்படமே வெற்றி படமாக அமைந்தது. முதலில் ஒரு சாப்ட் கேரக்டராக அறிமுகமானாலும், இவன் வேற மாதிரி படத்தில் ஒரு படி முன்னேறி, சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்கினார். அடுத்து அரிமா நம்பியிலும் அதிரடியாக நடித்து பேசப்படும் நடிகரானார். தற்போது இயக்குனர் கெளரவின், சிகரம் தொடு மற்றும் எழிலின், வெள்ளைக்கார துரை படங்களில் நடித்து வருகிறார். செப்டம்பரில் ராதிகா

தயாரிப்பில், விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். சினிமாவில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து நடித்து வருகிறார்.

 

முத்துராமன் பேரன் கெளதம் கார்த்திக்

பெங்களூரூ – மும்பை என்று பிசினெஸ் வேலை பார்த்து கொண்டிருந்தவர் கெளதம் கார்த்திக். நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான இவர் மாடலிங்

துறையில் இருந்த அனுபவத்தால் சினிமாவிற்கு வந்தார். மணிரத்னம் இயக்கிய கடல் படம் தான் இவரது முதல் படம். சினிமாவில் இவர் அறிமுகமான போது இவருக்கு டென்ஷன் இல்லை. இவரை விட இவரது அப்பா கார்த்திக் தான் ரொம்ப டென்ஷன் ஆனார். இருந்தாலும் முதல்படம் தோல்வியை கொடுத்தது. ஆனாலும், தன் துறு துறு நடிப்பால் ரசிகர்கள் பலரை இழுத்து வைத்துள்ளார். கெளதமிற்கு, அடுத்தடுத்து கைவசம் படங்கள் உள்ளன. ஐஸ்வர்யா தனுஷின், வை ராஜ வை அடுத்து வெளிவரப்போகும் எதிர்பார்ப்புக்கு உரிய படம். இவர் சினிமாவில் கொஞ்சம் பேசப்பட வாய்ப்பு இருக்கு, ஆனால் கால்ஷீட் சொதப்பாமல் கொஞ்சம் தொடர்பில் இருந்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

 

ஜெமினி-சாவித்திரி பேரன் அபினய்

காதல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் கதையுடனும், கதாநாயகிகளுடனும் பேசப்பட்டவர் ஜெமினி கணேசன். இன்றும் அவர் படங்கள் தான், வருங்கால நடிகர்களுக்கு நடிப்புக்கான பயிற்சியாக இருக்கிறது. அவரது மனைவி சாவித்திரி. இவர்களது மகள் விஜய சாமுண்டீஸ்வரியின் ரெண்டாவது மகன் தான் அபினய். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார், ஆக்லாந்தில் எம்.எஸ். படித்துள்ளார். இவருக்கும் சினிமா மீது தீராத காதல் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ராமனுஜன் படத்தில், அந்த கேரக்டராகவே வாழ்ந்தார் என்று பெயர் எடுத்துள்ளார். அவ்வளவு இயல்பாக அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து ஒரு சில படங்களில் கதை கேட்டு வருகிறார். ஆடி மாதம் முடிந்த பிறகு புதிய படம் பற்றிய செய்தி வெளிவரும் என தெரிகிறது. தற்போதுள்ள நடிகர்கள் போட்டியில் இவரும் தன் பங்கிற்கு ஒரு ரவுண்டு வருவார், அதற்காக தன்னை தயார் செய்து வருவதாக சொல்கிறார் அபினவ்.

 

தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா

தன் அசத்தும் நடிப்பாலும், காமெடியாலும் ரசிகர்களை அசர விடாமல் பார்க்க வாய்த்த பெருமை தேங்காய் சீனிவாசனை போய் சேரும். வில்லனாக நடித்தாலும் சரி, குணச்சித்திர நடிகராக நடித்தாலும் சரி, காமெடியனாக நடித்தாலும் சரி அசத்தி விடுவார். அப்படி பெருமையும் பெயரும் பெற்ற தேங்காய் சீனிவாசன் குடும்பத்தில் இருந்து வர இருக்கிறார் ஆதித்யா. தேங்காய் சீனிவாசன் மகன் சிவசங்கர் மகன் ஆதித்யா. மெக்கானிக்கல் இன்ஜினீயரான இவருக்கு நடிப்பில் ஆசை. படிப்பை முடித்து விட்டு தான் நடிப்பு என்று வீட்டில் சொல்லியதால், இப்போது நடிப்புக்கு தயாராகிவிட்டார். ஜிம், டான்ஸ், நடிப்பு பயிற்சி என்று இப்பவே பிசியாக இருக்கிறார். இவர் எடுத்த போட்டோ சூட்களை பார்த்தவர்கள், கண்டிப்பாக ஆதித்யா கோடம்பாக்கத்தில் மட்டும் இல்ல எல்லா மொழிகளும் ஒரு ரவுண்டு வருவார் என்கின்றனர். இவர் கண் கூட பல மொழி பேசுகிறதாம். விரைவில் ஒரு படத்தோட செய்திகளோடு நம்மை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார்.

 

நாகேஷ் பேரன் கஜேஸ்

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. ஒரு காலத்தில் இவரைப் போன்று டிஸ்கோ டான்ஸ் ஆடியவர்கள் யாரும் இல்லை. நாகேஷ் போல் நகைச்சுவை நடிகராக ஆகவில்லை, ஆனாலும் இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் இவரை பேச வைத்தது. சுமார் 75 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது ஆனந்த்பாபுவின் மகனும், அதாவது நாகேஷின் பேரன் கஜேசும் ஹீரோவாகி விட்டார். நந்தகுமார் இயக்கும் கல்கண்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். எந்த விளம்பரமும், ஆர்ப்பாட்ட அறிமுகமும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் மகனின் அறிமுக விழாவையும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார் ஆனந்த்பாபு. நாகேஷை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தரே கஜேசையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

 

எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிஹரன்

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரன் அதாவது எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் பிரபாகரன் ஹரிகரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்குள்ள ஹாலிவுட் ஸ்டூடியோவில் சினிமா கற்றிருக்கும் அவர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளார். நான் பரம்பரையாக சினிமா தொழிலிருந்து வந்ததாலோ என்னவோ எனக்கு சர்வதேச அளவில் படம் தயாரித்து புகழ்பெறவேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த ஆசையின் உந்துதல் தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்கவைத்தது என்கிறார் பிரபாகரன் ஹரிஹரன்.