புலிப்பார்வை: மகிந்தவிடம் திரையிட்டுக் காட்டவில்லை என்கிறார் இயக்குனர்

puliparvai_001விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ள பிரவீன் காந்தி, அனுமதிக்காக அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு திரையிட்டு காட்டியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.

இந்திய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரவீன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒரு இந்தியன் என்ற அடிப்படையில் இந்தியர்களுக்காகவே “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை தயாரித்ததாக குறிப்பிட்டுள்ள காந்தி, ஏன் அதனை இலங்கை ஜனாதிபதிக்கு காட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த திரைப்படம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை தமது திரைப்படத்தில் தெளிவாக காட்டியிருப்பதாக பிரவீன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் பாலசந்திரன் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக காட்டப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.

எந்த இடத்திலும் பாலசந்திரன் அவ்வாறு காட்டப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் வெளியானதும் தாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பது தெளிவாகும் என்றும் காந்தி குறிப்பிட்டுள்ளார்.