இதயம் என்னும் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவுகின்றன என இசை அமைப்பாளர் இளையராஜா கூறினார்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழா தொடக்க விழாவில் அவர் பேசியது:
கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டு வரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று இருக்கும் ஈரோடு நகரை அப்போது நான் கனவில் கூட சிந்தித்து பார்த்தது இல்லை. எனது சகோதர்களுடன் ஈரோடு நகரம் முழுவதும் பாடல் பாடி வந்திருக்கிறேன்.
எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம். வீட்டில் இருந்த பழைய ரேடியோவை ரூ.400-க்கு விற்பனை செய்து சென்னைக்கு எங்களது தாயார் அனுப்பி வைத்தார்.
ஆர்மோனிய பெட்டி, தபேலா, கித்தார் ஆகியவற்றை மட்டும் வைத்துகொண்டுதான் சென்னைக்கு கிளம்பிச் சென்றோம். அதை வைத்துதான் இசை அமைத்தோம். தானாக இசை அமைத்து டியூன் போடும் கலைஞர்கள் இக் காலத்தில் பிறக்கப் போவதில்லை.
தன்னை மட்டுமே தம்பட்டம் அடிக்க வேண்டும். மற்றவர்களை திட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது பொது நிகழ்ச்சியில் மேடை பயன்படுத்தப்படுகிறது. எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமேடை நிகழ்ச்சியை தவிர்த்து வருகிறேன்.கல்வி என்பது புத்தகத்தில் இருந்து மட்டுமே கிடைப்பது அல்ல. பரந்து கிடக்கிறது. எதில் இருந்தும் படிக்கலாம். வாழ்க்கையே கூட படிப்புதான். இதயம் ஒரு கோவில் போன்றது. ஆனால், நாம் தான் அதை சாக்கடையாக மாற்றிவைத்திருக்கிறோம். இதயம் என்னும் கோவிலை நல்ல நூல்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுத்தலாம்.
நான் பாடிய, இசை அமைத்த பாடல்கள் எல்லாம், நான் பாடுவதற்கு, இசை அமைப்பதற்கு முன்பே இருந்தவை. அதனால்தான் எனக்கு தானாக வருகிறது. சப்தம், நாதம் இல்லாமல் உலகம் இல்லை.
நமது நாத மண்டலம் நாசப்படுத்தப்பட்டு கிடக்கிறது. சுத்தமான இசை மூலம் நாத மண்டலத்தை சரிப்படுத்த முடியும். திரைப்படங்களில் பல கவிஞர்களின் பெயரில் வந்த பல பாடல் வரிகள் எனக்குச் சொந்தமானவைதான். இப்போது வரும் இசை நமது மூளையை மழுங்கச் செய்யும். எனவே, சுத்தமான இசையை கேட்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.
புத்தகத் திருவிழா அரங்குகளை இசை அமைப்பாளர் இளையராஜா திறந்துவைக்க வந்தபோது, கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால், நேரடியாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் தொடக்க விழா மேடையில் பேசும்போது, நேரடியாக சென்று திறக்க முடியாததால், மானசீகமாக மேடையில் இருந்தே திறந்துவைப்பதாகக் கூறி அரங்குகளை திறந்துவைத்தார்.
விழாவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செயலர் க.நா.பாலன் ஆகியோர் பங்கேற்றனர்.