இலங்கை தூதரகம் முன்பு நடிகர், நடிகைகள் ஆர்ப்பாட்டம்

sarathkumar_001தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் சார்பில் இலங்கை தூதரகம் முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வையும், பாதுகாத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாக சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது.

எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு, தற்போது நிபந்தனை அற்ற மன்னிப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறது.

இலங்கை அரசு தற்போது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் உரிமை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து போராடும் போதெல்லாம் அதை குற்றம் சாட்டுவதையோ, கேவலப்படுத்துவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக கொண்டுள்ளது.

தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதோடு, தமிழக முதலமைச்சரையும் கொச்சைப்படுத்தி வரும் இலங்கை அரசின் ஒட்டுவாலாக விளங்கும் இலங்கை துணை தூதரகம், தமிழ்நாட்டுக்கு தேவையற்ற ஒன்றாகும்.

இந்த துணை தூதரகத்தை உடனடியாக மூடக்கோரி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் திரையுலகின் அனைத்து துறைகளை சேர்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம், திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் இலங்கை ராணுவ இணையதளத்தில் கார்ட்டூன் மற்றும் கட்டுரை வெளியாகியுள்ளது.

இதனை கண்டிக்கும் விதமாக திங்கட்கிழமை தமிழ் திரைப்பட உலகம் சார்பில் நடத்தப்பட இருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.