எல்லோருடைய கூட்டுக் கலவைதான் நான்: கமல்ஹாசன்

  • சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு
    சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு “வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வழங்கிய ஆளுநர் கே.ரோசய்யா. உடன் இயக்குநர் ஆர்.சி.சக்தி.

எல்லோருடைய கூட்டுக் கலவைதான் நான் என்றார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழ் வர்த்தக சங்கம், சோழ நாச்சியார் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடிகர் கமல்ஹாசனுக்கு “வாழ்நாள் சாதனையாளர்’ விருதை சென்னையில் சனிக்கிழமை வழங்கியது.

ஆளுநர் கே. ரோசய்யா இந்த விருதை கமல்ஹாசனுக்கு வழங்கினார்.

விழாவில் கமல்ஹாசன் பேசியது:

“தேவர் மகன்’ படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் சக்திவேல். இயக்குநர் ஆர்.சி.சக்தியை ஞாபகத்தில் வைத்துதான் அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாத, என்னுடைய பதினேழாவது வயதில், என் கையில் நோட்டு ஒன்றைக் கொடுத்து “”உனக்குத் திரைக்கதை எழுதும் ஆர்வம் உள்ளது, எழுது” என்று கூறியவர் ஆர்.சி.சக்தி.

எனது கையெழுத்து அவ்வளவு நன்றாக இருக்காது என்று நான் கூறியவுடன் காந்தி, நெப்போலியன் ஆகியோரை உதாரணம் காட்டி அவர்களுக்கும் கையெழுத்து நன்றாகத்தான் இருக்காது என்று எனக்கு அவர் உற்சாகமூட்டினார்.

1960-70 கால கட்டங்களில் தொடங்கிய அந்தப் பயணம்தான் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தொழில்தான் தெய்வம்: அவர் கற்றுக் கொடுத்தது எது, எப்போது என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அதேபோல் என்னைச் சிறு வயது என்று பார்க்காமல் முதல் சந்திப்பிலேயே “வாங்க கமல்’ என்று அழைத்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.

எந்தவொரு சினிமா விழாவாக இருந்தாலும் தன்னுடைய விழாவாகக் கருதி பொறுப்பேற்றுக் கொள்ளும் உத்தமர் அவர்.

செய்யும் தொழில் தெய்வம். தெய்வமோ இல்லையோ, செய்யும் தொழில்தான் என்னை இந்த மேடையில் நிற்க வைத்துள்ளது.

தனி உருவமாக… என் தாய்-தந்தை, சகோதரர் சந்திரஹாசன் எல்லோரும் எனக்கு முன் மாதிரியாக நின்று காட்டினார்கள். பல்வேறு முகங்களைப் பார்த்து நான் செய்ததே, ஒருவரின் சாயல் என்று சொல்ல முடியாதபடி தனி உருவமாக மற்றவர்களுக்குத் தெரிகிறது. உண்மை என்னவென்றால் எல்லோருடைய சேர்க்கையிலும் உருவான கூட்டுக்கலவைதான் நான்.

இன்னும் உழைப்பதற்கும் ஓடுவதற்கும் என்னை உறுதியாக்கிக் கொள்ளும் விருதாகத்தான் இதைப் பார்க்கிறேன் என்றார் கமல்ஹாசன்.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.சி. சக்தி, சோழநாச்சியார் பவுண்டேஷன் தலைவர் ராஜசேகர், சென்னையிலுள்ள பிரிட்டன் துணைத் தூதர் பரத் ஜோஷி உள்பட பலர் கலந்துகொண்டனர்.