ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கில் தயாராகும் சின்ன பட்ஜெட் படங்களினால்தான் திரைப்படத்துறையில் உள்ள தொழிலாளர்களின் பிழைப்பு நடக்கிறது. அப்படிப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டருக்கு வர முடியாதபடி சிக்கலுக்குள்ளாகி முடங்கிப்போகின்றன.
இதற்கு பல நேரங்களில் பெரிய படங்களே காரணமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு..கோச்சடையான் படம். இப்படம் வெளியாவதை ஒட்டி பல சின்ன படங்கள் ஒதுங்கி வழிவிட்டன.
கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி பல தடவை மாற்றப்பட்டதால் தியேட்டருக்கு வர முடியாதபடி பல சின்ன படங்கள் பாதிக்கப்பட்டன. கோச்சடையான் படத்தைப்போலவே தற்போது அஞ்சான் படத்தினால் பல சின்ன பட்ஜெட் படங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சூர்யா, நடித்துள்ள அஞ்சான் ஆக்ஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனால் நிறைய படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
குறிப்பாக பரத், தனது 25-ஆவது படமாக நடித்துள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம்! இப்படம் கவிதாலயாவின் தயாரிப்பாக இருந்தாலும், மார்க்கெட் இல்லாத பரத் நடித்த படம் என்பதால் சின்ன பட்ஜெட் படமாகவே கருதப்படுகிறது.
அஞ்சான் வெளியாகும் ஆக்ஸ்ட் 15-ஆம் தேதி அன்றே ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கினர். எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
எனவே, அஞ்சான் ரிலீசுக்கு பிறகு ஒரு வாரம் கழித்து, அதாவது ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். காமெடிப்படமாக எடுக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.