“கத்தி’, “புலிப்பார்வை’ படங்களை திரையிட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு

“கத்தி’, “புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் படம் “கத்தி’.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு நெருக்கமாக உள்ள நிறுவனம். எனவே, இந்த நிறுவனம் தயாரிக்கும் “கத்தி’ படத்தைத் திரையிடக்கூடாது.

இதேபோல் “புலிப்பார்வை’ திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் போரில் ஈடுபட்டதைப் போன்றும் சித்திரித்துள்ளனர்.

சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தியதைப் போன்று எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தையும் தடைசெய்ய வேண்டும்.

இதையும் மீறி திரையரங்குகளில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

மேலும், நடிகர் விஜய் வீடு முன் வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.