ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் (63) திங்கள்கிழமை மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கலிஃபோர்னியா மாகாணம் டிபூரோனிலுள்ள தனது வீட்டில் திங்கள்கிழமை மதியம் அவர் சுவாசமில்லாமல் மயங்கிக் கிடந்தததாகவும், இரவு 12:02 மணிக்கு அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியம்ஸின் மக்கள் தொடர்பு அதிகாரி மாரா பக்ஸ்பாம் கூறுகையில், “”அண்மைக் காலமாகவே ராபின் வில்லியம்ஸ் மன அழுத்தத்துடன் காணப்பட்டார்” என்று தெரிவித்தார்.
தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்த வில்லியம்ஸ், நான்கு முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அவற்றில், “குட் வில் ஹன்டிங்’ என்ற படத்தில் நடித்தமைக்காக 1997-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த துணை நடிகருக்கான விருதை அவர் பெற்றார்.
ஆஸ்கர் மட்டுமின்றி, இரண்டு எம்மி விருதுகள், நான்கு “கோல்டன் குளோப்’ விருதுகள், ஐந்து கிராம்மி விருதுகள் மற்றும் இரண்டு “எஸ்.ஏ.ஜி’ விருதுகளை அவர் குவித்துள்ளார்.
அவர் நடித்த பை சென்டினெல் மேன், அலாதீன், மிஸஸ் டவுட்ஃபையர், ஜுமாஞ்சி, நைட் அட் தி மியூசியம் போன்ற படங்கள் உலகப் புகழ் பெற்றவை.
இந்தப் படங்களில் பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றுள்ளதால், இந்தியாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
தமிழில் வெளிவந்த “அவ்வை சண்முகி’ திரைப்படம் இவர் நடித்த “மிஸஸ் டவுட்ஃபையர்’ படத்தின் தழுவல் எனக் கூறப்படுவதுண்டு.
எனினும், “மிஸஸ் டவுட்ஃபையர்’ தமிழில் வெளியிடப்பட்டபோது ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பே, ராபின் வில்லியம்ஸின் நடிப்புத் திறமைக்கு சான்று என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராபின் வில்லியம்ஸ் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்
கடந்த சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
நகைச்சுவை கலைஞர்கள் அனைவரும் சமூக விமர்சகர்கள்தான். தங்களுடைய கோபத்தை நகைச்சுவை என்ற முகமூடியை வைத்து மறைத்துக் கொள்கின்றனர். அப்படியான வேடிக்கை முகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தால் அது மன அழுத்தத்தில் முடியும். நடிகர் ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு எளிதாக அழுவது.
திரையில் கூச்சலிடுவதையும் பீதியில் அழுவதையும் செய்த முதல் ஹீரோ ராம்போ. ஆனால் ராபின் வில்லியம்ஸ் திரையில் ஆண்கள் அழுவதற்கான ஒரு கண்ணியத்தை ஏற்படுத்தினார். அவரின் மரணம் தற்கொலை என்பது தெரியவந்தால், அவரது வாழ்க்கை முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதால் நான் அவரை வெறுக்கிறேன். இப்படி வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் குணம் கலைஞர்களிடமிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று. இது எனது இந்திய சினிமாவின் ஆதர்ச நடிகர் குடும்பத்துக்கும் பொருந்தும் என கமல் தெரிவித்துள்ளார்.
கமல் இரங்கல் தெரிவித்தது சந்தோசம்!!!!!
தற்கொலை சேந்து கொண்டவனை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் ,,இது ஆண்டவனின் உயிர் ,,மேலே தண்டனை உண்டு ,,,