இரும்புக்குதிரை இளைஞர்களை கெடுக்கும் படமல்ல! -அதர்வா

atharvaசமீபகாலமாக இளைஞர்கள் சாலைகளில் கண்மூடித்தமாக பைக் ஓட்டி வருகின்றனர். அவர்கள் செல்லும் வேகம் காரணமாக, சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் பதறிப்போகின்றன. அதனால்தான் சென்னை நகரத்தில் இந்த அளவு வேகத்துடன்தான் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அதிக வேகத்துடன் பைக் ஓட்டுபவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். சிலரை கைது செய்தும் வருகின்றனர். இதனால் மிதமிஞ்சிய வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் பட்டாளம் தற்போது மிதமான வேகத்தில் பைக் ஓட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள அதர்வா 180 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டியபடி நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் இதைப்பார்த்து இளைஞர்கள் இன்னும் கெட்டப்போவார்களே என்றொரு கருத்தும் நிலவியுள்ளது.

ஆனால் இதுபற்றி அதர்வா கூறும்போது, இந்த படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள நான் போட்டியின்போது அப்படி ஓட்டியிருக்கிறேன். மற்றபடி சாலைகளில் பைக் ஓட்டும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் நடித்திருக்கிறேன். அதாவது, ஒரு நிமிடம் சாலை விதிகளை மதிக்காமல் பைக் ஓட்டிய ஒருவனின் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதுதான் இப்படத்தின் ஹைலைட்டாக சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படம் வாகனம் ஓட்டும் அனைவருக்குமே ஒரு விழிப்புணர்வு படமாகத்தான் இருக்கும் என்கிறார் அதர்வா.